பக்கவாதத்தால் உடல் மொத்தம் முடங்கிப்போன 9 பேர்கள்: சுவிஸில் இருந்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்
சுவிஸில் கொரோனா பாதிப்புக்கு பின்னர் மீண்ட 9 பேர்கள் பக்கவாதத்தால் உடல் மொத்தம் முடங்கிய நிலையில் சிகிச்சையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதில் நால்வர் தற்போது பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்கும் மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களாக அவர்கள் நால்வரும் சிகிச்சையில் இருந்து வருவதாக அந்த மையத்தின் நிர்வாகிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
இன்னொரு மருத்துவமனையில் இதே காரணங்களால் இருவர் சிகிச்சையில் இருப்பதாகவும், கொரோனா பாதிப்புக்கு பின்னரே இருவரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.
அந்த இருவருக்கும் 60 வயதிருக்கும் எனவும் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சையில் உள்ளனர் எனவும் மருத்துவர் ஜோர்தான் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, இருவரும் பக்கவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவர்கள் சக்கர நாற்காலியில் காலத்தை கழிக்க நேரிடும் என்றார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்றே மருத்துவர் ஜோர்தான் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு இதுபோன்ற சிக்கல் இனி ஏற்படாது என நம்புவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.