முந்தைய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டதா? எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் தாக்கலின்போது எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல்
நேற்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை குறிப்பிடவில்லை.
அதேபோல் மாநிலங்களுக்கு இந்த பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றும், இது நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்றும் கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநிலத்தின் பெயரை குறிப்பிடவில்லை, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவில்லை என கண்டனங்களை எழுந்து வருகின்றன.
எந்த பாரபட்சமும் காட்டவில்லை
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ''பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை. எந்த பாரபட்சமும் காட்டவில்லை. எல்லா மாநிலங்களுக்கும் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனது பதில் உரையை கேட்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
முந்தைய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிடப்பட்டதா? பட்ஜெட் உரையில் எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட வாய்ப்பு கிடைப்பதில்லை. மாநிலங்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றால், அது புறக்கணிப்பு ஆகாது. இடைக்கால பட்ஜெட், பொது பட்ஜெட்டில் மராட்டியம் பெயர் குறிப்பிடவில்லை.
அங்கு ரூ.7,000 கோடி மதிப்பில் பாரிய துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களுக்கு பெயரை குறிப்பிடாமல் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடையும்'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |