தொடர்ந்து 28 இன்னிங்ஸில் சதம் காணாத இந்திய வீரர்
அவுஸ்திரேலியாவில் இந்திய அணி கடைசியாக விளையாடிய இரு டெஸ்ட் தொடர்களிலும் புஜாரா முக்கியப் பங்களிப்பு செய்தார்.
ஆனால் தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி வருகிறார் புஜாரா.
இது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்குக் கவலை தரும் விதமாகவே உள்ளது. இந்தத் தொடரில் புஜாரா எடுத்த ஓட்டங்கள் 73, 15, 21, 7, 0, 17. சென்னை டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 73 ஓட்டங்கள் எடுத்தார். அதன்பிறகு அவருடைய ஆட்டம் மோசமாகவே உள்ளது.
இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் லீச் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறி வருகிறார். ஆறு இன்னிங்ஸில் நான்கு முறை லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார். கடந்த 17 டெஸ்டுகளில், 28 இன்னிங்ஸில் சதமடிக்க முடியாமல் தவிக்கிறார் புஜாரா.
கடைசியாக 2019 சிட்னியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 193 ஓட்டங்கள் எடுத்தார். அதன்பிறகு 9 அரை சதங்கள் எடுத்தாலும் அவற்றை சதமாக மாற்றவில்லை.
இந்தியாவில் கடைசியாக 2017-ல் இலங்கைக்கு எதிராக 143 ஓட்டங்கள் எடுத்தார்.
புஜாரா இதுவரை 18 டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார். இந்தியாவில் 10 சதங்களும் வெளிநாட்டில் 8 சதங்களும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.