என்னைய பொல்லார்ட் ஓட எல்லாம் கம்பேர் பண்ணாதீங்க... என்னுடைய ஆசையே வேற! தமிழக வீரர் ஷாருக்கான் பேட்டி
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் ஷாருக்கான் என்னை பொல்லார்ட் உடன் எல்லாம் ஒப்பிட்டு பேசியது பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணிக்காக 5.23 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டவர் தான் ஷாருக்கான். தமிழக வீரரான இவர் உள்ளூர் தொடரில் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாகவே, அவருக்கு ஐபிஎல் தொடரில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவரின் சிறந்த ஆட்டத்தை கவனித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே மற்றும் சேவாக் போன்றோர், அவரை பொல்லார்ட்டுன் ஒப்பிட்டு பேசினர்.
இதனால் இது குறித்து இப்போது ஷாருக்கான் கூறுகையில், என்னை பொல்லார்ட் உடன் ஒப்பிட்டு பேசியது என்பது மிகப் பெரிய விஷயம். அதிலும் ஜாம்பவான்களான கும்ளே மற்றும் சேவாக் போன்றோர் இந்தளவிற்கு என் மீது நம்பிக்கை வைத்திருப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
இருப்பினும் நான் எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்க விரும்புகிறேன். நான் பஞ்சாப் அணியில் நுழைந்தவுடன், அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ளே மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தனர்.
அவர்கள், என்னிடம் இவ்வளவு நாள் தமிழ்நாடு அணிக்காக செய்ததையே பஞ்சாப் அணிக்காகவும் செய்து கொள், நீ பெரிதாக வேறு எதையும் மாற்றி கொள்ள தேவை இல்லை. அணியின் பெயர் மட்டுமே மாறியுள்ளது,
அதனால் நீ எதை பற்றியும் கவலை கொள்ளவோ, பயப்படவோ தேவை இல்லை என்று கூறிவிட்டனர், அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது என கூறியுள்ளார்.