இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் குளறுபடி இல்லை: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் எந்தக் குளறுபடியும் இல்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
குளறுபடி இல்லை
கடந்த ஜூன் 12-ம் திகதி அன்று குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது. இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.
மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர விபத்தில் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களையும் சேர்ந்து மொத்தம் இறப்பு எண்னிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
சர்வதேச விமானப் போக்குவரத்து விதிகளின்படி, விமான விபத்து நடைபெற்ற 30 நாட்களுக்குள் ஆரம்ப அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, கடந்த 12 ஆம் திகதி அன்று போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் விபத்துக்கான ஆரம்ப அறிக்கை வெளியானது.
அந்த அறிக்கையில், இன்ஜின்களுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதே விபத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களின் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது.
அதன்படி மேற்கொண்ட ஆய்வில் போயிங் 787 விமானங்களில் இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் எந்தக் குளறுபடியும் இல்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |