இனி திருமணங்களில் ஆயுதம் தாங்கிய பொலிசார் அவசியம்... பிரெஞ்சு நகரம் ஒன்று விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்
வடக்கு பிரான்சில் உள்ள நகரம் ஒன்றின் மேயர் ஒருவர், இனி திருமணங்கள் நடத்தவேண்டுமானால், சம்பந்தப்பட்டவர்கள் சேத இழப்பீடு டெபாஸிட் செலுத்தவேண்டும் என்றும், திருமண நிகழ்ச்சிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் இருக்கவேண்டும் என்றும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரான்சிலுள்ள Poissy என்ற பகுதியின் மேயராக இருப்பவர் Karl Olive.
சமீபத்தில் அப்பகுதியில் நிகழ்ந்த மூன்று திருமண நிகழ்ச்சிகளில் வன்முறை வெடித்ததுடன், பெரும் பொருள் சேதம் ஏற்பட்டது. திருமணத்தில் பங்கேற்ற அரசு அலுவலர் ஒருவர் மக்களை அமைதியாக இருக்க கோரியதற்காக அவரை திருமணத்துக்கு வந்தவர்கள் தாக்க, அதைத் தொடர்ந்து நான்கு பேரை பொலிசார் கைது செய்ய நேரிட்டது.
ஆகவே, திருமணம் என்னும் கொண்டாட்டம், சேதத்தை ஏற்படுத்தும் நாளாக மாறி வருவதைத் தவிர்க்கும் வகையில், திருமணம் செய்யவிருக்கும் தம்பதியர், 1,000 யூரோக்கள் டெபாஸிட் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டை அறிமுகம் செய்துள்ளார் Karl.
அதில் 400 யூரோக்கள் திருமணத்தில் தாமதம் ஏற்பட்டால் அதற்காகவும், 500 யூரோக்கள் சேதம் ஏற்பட்டால் அதற்காகவும், 100 யூரோக்கள் சுத்தம் செய்வதற்காகவும் என அவர் விளக்கமும் கொடுத்துள்ளார்.
திருமணத்திற்கு முன் 1,000 யூரோக்கள் டெபாஸிட் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன், நடப்பதை பதிவு செய்வதற்காக உடலில் பொருத்தப்பட்ட கமெராக்களுடன், ஆயுதம் தாங்கிய பொலிசாரும் திருமணங்களில் நிறுத்தப்படவேண்டும் என்றும் கூறியுள்ள Karl, இனி திருமணங்களில் 99 பேருக்கு பதிலாக 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.