பணம் இல்லை... கடன் வாங்க பயம்: சுவிட்சர்லாந்தை கொரோனா படுத்தும்பாடு
கடும் கட்டுப்பாட்டுடன் பட்ஜெட் போடும் நாடுகள் கூட கொரோனா காலகட்டத்தில் கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டன.
அப்படி ஒரு சூழல் உலகின் பல நாட்களில் நிலவும் நிலையில், சுவிட்சர்லாந்து கடன் வாங்குவது குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் நிறுவனங்கள் மற்றொரு பொதுமுடக்கம் காரணமாக திணறிக்கொண்டிருக்கும் நிலையில், உதவுவதற்காக, ஒரு வழியாக தனது கஜானாவை லேசாக திறந்துள்ளது சுவிட்சர்லாந்து அரசு.
ஆம், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், 10 பில்லியன் சுவிஸ் ப்ராங்குகளை கொரோனா கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக கொடுத்து உதவ சுவிட்சர்லாந்து அரசு முன்வந்துள்ளது.
ஆனால், அந்த உதவி குறித்து அறிவிக்கும்போது கூட, சுவிஸ் நிதி அமைச்சர் Ueli Maurer, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாடு கடன் வாங்க நேர்ந்துள்ளதாக மீண்டும் புலம்பித்தள்ளியுள்ளார்.
உதவி வழங்கும்போதே, இன்னும் ஆறு மாதங்களில், நாம் கடனாக வாங்கிய 10 பில்லியன் சுவிஸ் ப்ராங்குகளைத் திருப்பிக் கொடுக்கவேண்டியுள்ளது என்கிறார் அவர்.
பணக்கார நாடு என்று உலகமே அறிந்த சுவிட்சர்லாந்து தனது நிறுவனங்களுக்கு போதுமான ஆதரவளிப்பதில்லை என ஒரு பக்கம் விமர்சனம் அதிகரித்துவரும் நிலையில், அரசாங்கத்திடம் பணம் இல்லை என மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் நிதி அமைச்சர் Ueli Maurer.
நம் நாடு ஒரு நாளுக்கு 150 மில்லியன் ப்ராங்குகள் கடன் வாங்குகிறது, ஒரு மணி நேரத்துக்கு 6 மில்லியன், ஒரு நிமிடத்திற்கு 100,000 ப்ராங்குகள், என புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார் அவர்.
சுவிட்சர்லாந்து இன்னும் தாராளமாக உதவலாம், அதன் தேவைகளுக்காக கடனும் வாங்கலாம் என்று கூறும் பொருளாதார நிபுணரான Michael Graff, சுவிட்சர்லாந்தில் கடன் குறித்த ஒரு அச்சம் எபோதுமே நிலவுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
1990களில் ரியல் எஸ்டேட் பிரச்சினை காரணமாக பயங்கர கடன் பிரச்சினை ஏற்பட்டது உண்மைதான், ஆனால், 2003வாக்கில் நாடு மீண்டும் சாம்பியனாக எழுந்துவிட்டது. சுவிட்சர்லாந்தில் கடன் குறித்த காரணமற்ற ஒரு பயம் நிலவுவதை Cedric Tille என்னும் மற்றொரு பொருளாதார நிபுணரும் சுட்டிக்காட்டுகிறார்.
அண்டை நாடுகளைப் போல் சுவிட்சர்லாந்து முதல் கொரோனா அலையால் மோசமான அளவுக்கு பாதிக்கப்படவில்லை, எனவே, சொல்லப்போனால், அரசு இரண்டாவது கொரோனா அலையின்போது சீக்கிரமாகவே அரசு உதவிகளை வழங்கியிருக்கவேண்டும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.