புதிய விவாகரத்துச் சட்டம்: நாளை முதல் பிரித்தானியாவில் அமுலுக்கு வருகிறது
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய விவாகரத்துச் சட்டம் ஒன்று, நாளை முதல் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் அமுலுக்கு வருகிறது.
இந்த புதிய சட்டம் 'no fault divorce' என அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் தம்பதியர், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டவேண்டியதில்லை. தங்களுக்கு சேர்ந்து வாழ இஷ்டமில்லை என்றாலே விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
அத்துடன், தம்பதியரில் ஒருவர் மட்டுமே விவாகரத்துக்கு விண்ணப்பித்தாலே போதும்.
நாம் சமீப காலமாக விவாகரத்து தொடர்பில் வெளியான பல செய்திகளைப் பார்த்திருக்கிறோம். கணவன் அல்லது மனைவி, மற்றவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று குற்றம் சாட்ட, அது பெரிய செய்தியாகி, ஒரு தரப்பினரை அவமானத்துக்குட்படுத்த, இல்லையென்றால், காதலற்ற ஒரு வாழ்வில் கட்டாயத்தின் பேரில் வாழும் ஒருவர், மற்றவர் தனக்கு விவாகரத்து கொடுக்காததால் வேறு வழியில்லாமல் அவருடன் வாழ்வது, என்பது போன்ற பல பிரச்சினைகள் எழாமல் இருக்க இந்த சட்டம் உதவும் என ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அதே நேரத்தில், விவாகரத்து நடைமுறையை எளிதாக்குவது, திருமணத்தின் புனிதத்தன்மையை சேதப்படுத்தும் என சிலர் கருதுகிறார்கள். பிரச்சினை ஏற்பட்டால் எளிதில் விவாகரத்து செய்துவிடலாம் என்பதால், கவனமாக யோசித்து அலசி ஆராயாமலே திருமணம் செய்துகொள்ளும் ஒரு நிலை உருவாகலாம் என்கிறார்கள் அவர்கள்.
அத்துடன், சின்னதாக ஒரு பிரச்சினை எழுந்ததுமே, உறவுகளை சரி செய்ய, பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து யோசிக்காமலே அதிக தம்பதியர் விவாகரத்து செய்யும் நிலை உருவாகலாம் என சிலர் அஞ்சுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேல், கணவன் அல்லது மனைவிக்கு துரோகம் செய்த ஒருவர், தான் செய்த தவறுக்கு பதில் சொல்லும் அவசியம் இல்லாமலே, எளிதில் விவாகரத்து செய்துவிட்டுப் போய்விடும் ஒரு அபாயமும் உள்ளது என சிலர் வாதம் முன்வைத்துள்ளார்கள்.
ஆனாலும், நாளை இங்கிலாந்திலும், வேல்ஸ் நாட்டிலும் இந்த சட்டம் அமுலுக்கு வருவதில் மாற்றமில்லை!