இனி சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்க தேவையில்லை - ஏஐ மூலம் கட்டண வசூல்
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்காமல், ஏஐ மூலம் கட்டண வசூலிக்கப்பட உள்ளது.
சுங்க கட்டணம்
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரொக்கமாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த போது, நேர விரயம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், Fastag நடைமுறை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயப்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம், 3 முதல் 10 நிமிடங்களில் இருந்து 60 வினாடிகளாக குறைந்தது.
AI மூலம் சுங்க கட்டண வசூல்
தற்போது, காத்திருக்கும் நேரத்தை முற்றிலும் நீக்கி, சுங்கச்சாவடிகளை வாகனங்கள் 80 கிமீ வேகத்தில் கடக்கும் வகையில் புதிய திட்டம் அமுலுக்கு வர உள்ளது.

MLFF எனப்படும் பலவழிப் பாதை தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பில், AI மற்றும் அதிவேக கேமராக்கள் உதவியுடன் வாகனம் அடையாளம் காணப்பட்டு, பயணித்த சரியான தூரத்தின் அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும்.
இது குறித்து மாநிலங்களைவில் பேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, "2026 ஆம் ஆண்டிற்குள் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.

இந்த திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், ரூ.1,500 கோடி வரையிலான எரிபொருள் செலவை மிச்சம் படுத்த முடியும். அரசுக்கு கூடுதலாக ரூ.6,000 வருவாய் கிடைக்கும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |