இதை இந்திய மக்கள் யாரும் நம்பவில்லை - ஏர் இந்தியா விபத்து வழக்கில் நீதிமன்றம் கருத்து
இந்திய மக்கள் யாரும் நம்பவில்லை என ஏர் இந்தியா விமான விபத்து வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஜூன் 13 ஆம் திகதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 242 பேரில், ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க, மற்ற 241 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து, விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது.
நீதித்துறை மேற்பார்வையில் விசாரணை நடைபெற வேண்டுமென மறைந்த விமானி சுமீத் சபர்வாலின் தந்தை புஷ்கராஜ் சபர்வால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
இந்திய மக்கள் யாரும் நம்பவில்லை
சுமீத் சபர்வால் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சங்கரநாராயணன், "விசாரணை சுயாதீனமாக நடைபெறவில்லை எனக்கூறியதோடு, விமானியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து குடும்பத்தினரிடம் கேட்கப்படும் கேள்விகள் குறித்து சுட்டிக்காட்டினார்.
மேலும், பெயரிடப்படாத அரசாங்க ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட செய்தியையும் அவர் குறிப்பிட்டு, தவறான பொதுக் கருத்துக்கு வழிவகுப்பதாகக் கூறினார்.
உச்ச நீதிமன்றம் வெளிநாட்டு செய்திகளால் வழிநடத்தப்படவில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
மேலும், "நீங்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். உங்கள் கோபம் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் பொதுமக்களின் கருத்துக்கும் உண்மை நிலைப்பாட்டிற்கும் இடையே தெளிவான முரண்பாடு உள்ளது.

நாம் 124 கோடி மக்களை கொண்டு நாடு. அவர்களில் யாரும் குற்றம் விமானி மீது தான் என்பதை நம்பவில்லை. துயரத்திற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது விமானிகள் மீது இல்லை.
நாங்கள் அறிக்கையை ஆராய்ந்ததில் விமானிகள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. இதுவரை நடைபெற்ற முதற்கட்ட விசாரணையிலும், விமானிகள் மீது தவறு உள்ளதாக கூறப்படவில்லை.
காக்பிட் ரெக்கார்டரைப் பற்றி ஒரு குறிப்பு மட்டுமே உள்ளது, அதில் ஒரு விமானி உங்கள் மகனிடம் சுவிட்சை அணைத்தாரா என்று கேட்கிறார், உங்கள் மகன் எதிர்மறையாக பதிலளிக்கிறார்.
அறிக்கையில் இதுதான் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் உறுதி செய்வதே விசாரணையின் முக்கிய நோக்கம்" என தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |