யாரும் இதுவரை முயற்சிக்கவில்லை... கமலா ஹாரிஸ் குறித்து எலோன் மஸ்க் சர்ச்சை கருத்து
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மீது மீண்டும் படுகொலை முயற்சி நடந்த நிலையில், எலோன் மஸ்க் முன்வைத்த கேள்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் அதிர்வலை
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஞாயிறன்று டொனால்டு ட்ரம்ப் மீது படுகொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக FBI தெரிவித்துள்ளது. ஆனால் ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என்று அவரது பரப்புரை ஒருங்கிணைப்பு குழுவும் அதிகாரிகள் தரப்பும் உறுதி செய்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிதாரி மீது அமெரிக்க உளவுத்துறை துப்பாக்கியால் சுட்டதாகவும், தாக்குதல்தாரி பயன்படுத்திய AK-47 ரக துப்பாக்கி மற்றும் GoPro கமெரா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
டொனால்டு ட்ரம்ப் மீது குறிவைக்கப்படுவது இது இரண்டாவது முறை என்பதால், அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் எலோன் மஸ்க் ஆதரவாளர் ஒருவர் தமது சமூக ஊடக பக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்பை ஏன் அவர்கள் கொல்ல வேண்டும் என அந்த நபர் கேள்வி ஒன்றை பதிவு செய்ய, அதற்கு பதிலளித்துள்ள எலோன் மஸ்க், ஒருவர் கூட ஜோ பைடனையோ கமலா ஹாரிஸையோ கொல்ல முயற்சிக்கவில்லையே என குறிப்பிட்டுள்ளார்.
எலோன் மஸ்க் தெரிவு
டொனால்டு ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான எலோன் மஸ்க் வெளிப்படையாகவே தமது அரசியல் பார்வையை முன்வைத்தும் வந்துள்ளார். புலம்பெயர் மக்களை மொத்தமாக வெளியேற்றுவேன் என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ள கருத்துக்கு, எலோன் மஸ்க் ஆதரவு தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, சமீபத்தில் டொனால்டு ட்ரம்புடன் நேரலை விவாதம் ஒன்றையும் எலோன் மஸ்க் முன்னெடுத்திருந்தார். மேலும், ட்ரம்ப் ஜனாதிபதியாக வெல்வார் என்றால், புதிய பொறுப்புக்கு எலோன் மஸ்க் தெரிவு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியானது.
இதனிடையே, துப்பாக்கிதாரி ட்ரம்ப் மீது தாக்குதல் முன்னெடுத்தாரா என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. அந்த நபர் மறைந்திருந்த புதர் மீது ரகசிய பொலிசாரே துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால் துப்பாக்கி மற்றும் கமெரா உடன் அந்த நபர் பதுங்கியிருந்தார் என்பது மட்டும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |