அகதிகள் வேண்டாம்... சிறைக்கைதிகளை வேலைக்கு வைத்துக்கொள்ளுங்கள்: ஊழியர் பற்றாக்குறையை தீர்க்க நீதித்துறை செயலரின் ஆலோசனை
பிரித்தானியாவில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக, சிறைக்கைதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு பிரித்தானிய நீதித்துறைச் செயலர் ஆலோசனை கூறியுள்ளார்.
பிரித்தானியாவில், உணவகங்கள், மதுபான விடுதிகள் முதலான இடங்களில் வேலை செய்துவந்த இளம் ஐரோப்பியர்கள், பிரெக்சிட் அல்லது பொதுமுடக்கம் காரணமாக தங்கள் நாடுகளுக்குத் திரும்பிவிட்டதைத் தொடர்ந்து பெருமளவில் ஊழியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. சுமார் ஒரு மில்லியன் வேலையிடங்கள் காலியாக உள்ளதாக தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த காலியிடங்களை சிறைக்கைதிகளைக் கொண்டு நிரப்பலாம் என பிரித்தானிய நீதித்துறைச் செயலரான Dominic Raab ஆலோசனை கூறியுள்ளார்.
சிறைத்தண்டனை முடிந்து விடுதலை ஆகுபவர்களைக்கொண்டு அந்த காலியிடங்களை நிரப்பலாம். இல்லையென்றால் சிறையிலிருப்பவர்களை தினமும் வேலைக்கு அனுப்பி அந்த காலியிடங்களை நிரப்பலாம் என்று கூறியுள்ளார் அவர். அதனால் பொருளாதாரத்துக்கும் நன்மை, சமுதாயத்துக்கும் நன்மை. சிறையிலிருந்து வெளியே வருபவர்களும் இனி மீண்டும் தங்கள் கடந்த கால குற்ற வாழ்க்கைக்குத் திரும்பாமல் திருந்தி வாழ ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்கிறார் அவர்.
இந்நிலையில், சுமார் 30,000 அகதி நிலைக்காக காத்திருப்போர், தங்களால் தொடர்ந்து பிரித்தானியாவில் வாழமுடியுமா என்ற கேள்வியின் பதிலுக்காக ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கிறார்கள்.
அவர்களைக் கொண்டு இந்த காலியிடங்களை நிரப்பலாமே என்ற கேள்வி Dominic Raab முன் வைக்கப்பட்டது.
லேபர் கட்சியும் 100,000 புலம்பெயர்வோர் விசாக்கள் வழங்கி லொறி சாரதிகள் பற்றாக்குறையை தீர்க்க கோரியிருந்தது.
ஆனால் அந்த திட்டத்தை Dominic Raab நிராகரித்துவிட்டார். அது, வெளிநாட்டவர்களை நீண்டகாலத்துக்கு நம்பியிருக்கும் ஒரு நிலையை உருவாக்கிவிடும் என்று கூறும் அவர், அவர்களுக்கு குறைந்த ஊதியமே வழங்கப்படும் என்பதால், அதேபோல் நம் நாட்டிலுள்ளவர்களின் ஊதியமும் குறைந்து அவர்களது வருவாயை அது பாதித்துவிடும் என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த பதிலைக் கூறியுள்ள Dominic Raab, செக்கோஸ்லோவாகியா நாட்டிலிருந்து அகதியாக வந்த ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.