5 நாட்களாக Digital Arrest செய்யப்பட்ட இந்திய குடும்பம்.., கடைசியில் ரூ.1 கோடி இழந்த பரிதாபம்
5 நாட்களாக ‘Digital Arrest ’ செய்யப்பட்ட குடும்பத்தை ஏமாற்றி ரூ.1.10 கோடிக்கு மேல் மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகளைப் போல் தங்களை காட்டிக்கொண்டு பணம் செலுத்துவதற்கு அவர்களை பயமுறுத்தியதாக காவல்துறை கூறியது.
Digital Arrest
'டிஜிட்டல் கைது' என்பது ஒரு புதிய வகையான சைபர் மோசடி ஆகும். இதில் மோசடி செய்பவர்கள் சிபிஐ அல்லது சுங்கத் துறை போன்ற சட்ட அமலாக்க நிறுவனங்களின் அதிகாரிகளாக நடிக்கின்றனர்.
அவர்கள் வீடியோ கால்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துகிறார்கள். மேலும், அவர்களின் பெயரில் உள்ள சர்வதேச பார்சல்களில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் இருப்பதாக பொய்யாகக் கூறுகின்றனர்.
இதில் கைதுக்கு பயந்து பாதிக்கப்பட்டவர்கள் மோசடி செய்பவர்களுக்கு பெரும் தொகையை செலுத்துகிறார்கள்.
ரூ.1 கோடி இழப்பு
பாதிக்கப்பட்ட சந்திரபான் பாலிவாலுக்கு பிப்ரவரி 1 -ம் திகதி அன்று தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அப்போது போனில் பேசியவர், தான் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRAI) இருந்து பேசுவதாக கூறி, அவரது சிம் கார்டு முடக்கப்படும் என்று எச்சரித்தார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, மற்றொரு நபர் பாலிவாலைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர் பேசுகையில், உங்களுடைய வழக்கு மும்பை சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகக் கூறினார்.
பின்னர், மோசடி செய்பவர் ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்து மும்பையின் கோலாவா காவல் நிலையத்தில் இருந்து வீடியோ கால் செய்ததாக காவல்துறை துணை ஆணையர் ப்ரீத்தி யாதவ் தெரிவித்தார்.
அதாவது, பலிவால் பணம் பறித்ததாக பொய்யாக குற்றம் சாட்டி, அவர் மீது பல்வேறு இடங்களில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், அவர் மீதான பண மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் சந்திரபான் பாலிவால் மட்டுமல்லாமல் அவரது மனைவி மற்றும் மகளுக்கும் இதேபோன்ற வீடியோ அழைப்புகள் வந்தன. அவர்கள் கோரப்பட்ட தொகையை செலுத்தாவிட்டால் கைது செய்வதாக மிரட்டியுள்ளனர்.
இவர்களும் பயத்தின் காரணமாக, ஐந்து நாட்களில் ரூ.1.10 கோடியை மோசடி நபர்களுக்கு மாற்றியுள்ளனர். பின்னர், மோசடியை உணர்ந்த பாலிவால் காவல்துறையை அணுகியுள்ளார்.
தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் குற்றவாளிகளை பிடிக்க தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், தெரியாத எண்களில் இருந்து சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் அதைச் சரிபார்த்து நடவடிக்கை எடுக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |