பெற்றோர் தூக்கத்திலிருந்து எழாததால் உறவினர்களை அழைத்த சிறுமி: தெரியவந்த பயங்கரம்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன் பெற்றோர் காலையில் தூக்கத்திலிருந்து எழாததால் தன் தாத்தா பாட்டியை அழைத்துள்ளார் ஒரு 10 வயது சிறுமி.
அவர்கள் வந்தபோது, அவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது!
தூக்கத்திலிருந்து எழாத தம்பதியர்
உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா என்னுமிடத்தில் மூன்று குழந்தைகளுடன் ஒரு தம்பதியர் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் தூக்கத்திலிருந்து எழுந்த அந்த தம்பதியரின் மகளான 10 வயது சிறுமி, தன் பெற்றோர் இன்னமும் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்களை எழுப்ப முயன்றுள்ளார்.

பெற்றோர் எழாததால், தன் தாத்தா பாட்டியை அழைத்துள்ளார் அந்த சிறுமி.
அவர்கள் வந்து பார்க்கும்போது, முறையே 42 மற்றும் 38 வயதுடைய அந்த தம்பதியரும், அவர்களுடைய 8 வயது மகனும் 4 வயது மகளும் சுயநினைவிழந்து கிடப்பதைக் கண்டு பொலிசாரை அழைத்துள்ளனர்.
கடைசியாக முந்தைய நாள், அதாவது, புதன்கிழமை இரவு தாங்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு படுத்ததாக அந்த சிறுமி கூற, அந்த தம்பதியர் தங்கள் உணவில் விஷம் கலந்து பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, தாங்களும் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் அதை சாப்பிட்டிருக்கலாம் என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.
உடனடியாக அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த தம்பதியர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகளுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவரும் நிலையில், அவர்கள் நிலைமையும் கவலைக்கிடமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |