இயக்குனர் ஷங்கர் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பிரபல இயக்குனரான சங்கர் 11 ஆண்டுகளாக எந்திரன் படம் கதை திருட்டு விவகாரத்தில் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு நடிகர் ரஜினி, ஜஸ்வர்யாராய் திரைப்பிரபலங்கள் பலர் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ஆம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குனர் ஷ்ங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.
கடந்த 10 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பபட்டது.
அதில், கலாநிதிமாறன் மீது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடுத்த வழக்கு செல்லாது எனவும், இயக்குனர் ஷங்கர் மீது காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கை நடத்த முகாந்திரம் உள்ளது என்றும் கூறிய நீதிமன்றம், கதை ஒரே மாதிரி இருப்பதாக கூறி கதைக்கும் சினிமாவுக்கும் உள்ள 16 ஒற்றுமைகளை பட்டியலிட்டுக் காட்டி அதன் மூலம் காப்புரிமை மீறல் அப்பட்டமாக தெரிகிறது.
அதனால், எழும்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஷங்கருக்கு எதிரான வழக்கை காப்புரிமை சட்டப்படி தொடர்ந்து நடத்தலாம் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புகார்தாரர் ஆருர் தமிழ்நாடன் நேரில் ஆஜர் ஆகி வழக்கு விசாரணைக்குத் தயாராக இருப்பதாக வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், இயக்குனர் ஷங்கர் எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகவில்லை.
இதையடுத்து எழும்பூர் பெருநகர 2-வது மாஜிஸ்திரேட் இயக்குநர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தார். மேலும் பிப்ரவரி 19-ஆம் திகதி முதல் விசாரணையை தொடங்க உள்ளதாகவும் அறிவித்தார்.
இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக இயக்குநர் சங்கர் நேரில் ஆஜராகவில்லை என்ற புகாரின் அடிப்படையிலேயே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.