சுவிட்சர்லாந்துக்கு வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்
North Korea Threatens To Close Swiss Diplomatic Office Weeks After Opening: வடகொரியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூடிவிடுவோம் என வடகொரிய தரப்பு மிரட்டியுள்ளது.
வடகொரியாவில் சமீபத்தில்தான் சுவிஸ் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது.
இந்நிலையில், அதை மூடிவிடுவோம் என வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னணி
இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, வடகொரியாவிலுள்ள Wonsan நகரில் முகாம் ஒன்று நடத்தப்பட்டது.

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகளிலிருந்து சிறுபிள்ளைகளை வடகொரியாவுக்கு கொண்டுவந்து, அவர்களை ரஷ்யர்களாக்குவதற்கான முயற்சிகள் அந்த முகாமில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, அந்த முகாமை சுவிட்சர்லாந்து தனது தடைகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்
இந்நிலையில், வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங், சுவிட்சர்லாந்து தடைகள் விதித்துள்ள விடயத்தைக் கடுமையாக கண்டித்துள்ளார்.
சமீபத்தில் வடகொரியாவில் திறக்கப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூட, தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு ஆலோசனை கூற இருப்பதாகவும், தக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் மிரட்டியுள்ளார் கிம் யோ ஜாங்.
மேலும், சுவிட்சர்லாந்துடனான உறவுகளால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது சந்தேகமே என்று கூறியுள்ள கிம் யோ ஜாங், ஏனென்றால், லண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸின் தலைமையைப் பின்பற்றி, சுவிட்சர்லாந்து வட கொரியாவின் இறையாண்மையையும், அதன் மக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளையும் கூட மறுக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.