வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் புத்திசாலி.., புகழாரம் சூட்டிய ட்ரம்ப்
வட கொரிய அதிபர் கிம் ஒரு புத்திசாலி என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
கிம் புத்திசாலி
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் அமோகமாக வெற்றி பெற்றார்.
அதன்படி, அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். இதையடுத்து, அவரது அறிவிப்புகள் பல நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல செய்தி ஊடகத்துக்கு ட்ரம்ப் அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்ததை பற்றி நினைவு கூர்ந்தார். ட்ரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் கிம்மை 3 முறை சந்தித்தார்.
அப்போது, அவருடன் ஏற்பட்ட சந்திப்பு சுமூகமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அவரை மீண்டும் சந்திக்கும் திட்டம் இருப்பதாக கூறிய ட்ரம்ப், "கிம் மதவெறியர் அல்ல அவர் ஒரு புத்திசாலியான நபர்” பாராட்டினார்.
ட்ரம்ப் காலத்தில் தான் வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க அதிபர் மற்றும் வட கொரிய அதிபர் சந்திப்பு நிகழ்ந்தது.
அமெரிக்காவையும், தென் கொரியா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளையும் தன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் வடகொரியா கருதுகிறது. அதனால் தான் பல்வேறு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்துகிறது.
1950 முதல் 1953 வரையிலான மோதல்கள் ஒரு போர்நிறுத்தத்தில் முடிவடைந்ததிலிருந்து இரு கொரிய நாடுகளும் தொழில்நுட்ப ரீதியாக போரில் ஈடுபட்டுள்ளன.
மேலும், வட கொரியாவும், ரஷ்யாவும் நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் தான் வட கொரியா நிகழ்த்தும் அணு ஆயுதச் சோதனைகளை ரஷ்யா விமர்சனம் செய்வதில்லை.
இந்நிலையில், தான் வட கொரிய அதிபரை சந்திக்கும் திட்டம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |