அயர்லாந்து காவல் அதிகாரி சுடப்பட்ட வழக்கில் 7 பேர் கைது! 28 முதல் 72 வயதுடையவர்கள் மீது குற்றச்சாட்டு
அயர்லாந்தில் காவல்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளனர்.
தலைமை ஆய்வாளர் மீது கொலை முயற்சி
வடக்கு அயர்லாந்தின் ஓமாக் பகுதியில் உள்ள விளையாட்டு வளாகத்திற்கு வெளியே, இளைஞர் கால்பந்து விளையாட்டிற்கு துப்பறியும் தலைமை ஆய்வாளர் ஜான் கால்டுவெல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்களால் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்பிழைத்தார். கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
PA Media
11 பேர் கைது
இந்த நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக வெள்ளிக்கிழமை அன்று, 9 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 11 பேர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களில் இரு ஆண்களும், இரு பெண்களும் விடுவிக்கப்பட்டனர். தற்போது கைது செய்யப்பட்ட ஏழு பேரும் கொலை முயற்சி குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ளனர் எனவும், அவர்களில் இருவர் 28 வயதுடையவர்கள் மற்றும் 33, 38, 45, 47 மற்றும் 72 வயதுடையவர்கள் என்றும் வடக்கு அயர்லாந்தின் பொலிஸ் சேவை நேற்று இரவு தெரிவித்தது.
ஏழு பேர் மீது குற்றச்சாட்டு
38 மற்றும் 45 வயதுடைய இருவர் தடைசெய்யப்பட்ட அமைப்பான IRAவில் உறுப்பினர்களாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டனர். தற்போது குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும், வீடியோ இணைப்பு மூலம் டங்கனன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாளை நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Reuters