தடுப்பூசி தொடர்பில் சுவிஸ் விமான சேவை நிறுவனம் முக்கிய தகவல்
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத விமானிகளை பணி செய்ய அனுமதிப்பதில்லை என சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அவசர தேவை கருதி இயக்க நேர்ந்தால் கூட, தடுப்பூசி போட்டுக்கொள்ளாத விமானிகளை பணியில் ஈடுபடுத்துவதில்லை எனவும் சுவிஸ் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சுவிஸ் விமான சேவை நிறுவனத்தை பொறுத்தமட்டில் விமானிகள் உட்பட 200 ஊழியர்கள் இதுவரை தனிப்பட்ட காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.
ஆனால் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு மாத ஊதியம் அளிக்கப்பட்டு வந்தாலும், பணியில் ஈடுபடுத்துவதாக இல்லை என்றே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் விமான சேவை நிறுவனத்தில் பல விமானிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, விமானம் இயக்க முடியாமல் போன சூழலும் ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தற்போதும் அவ்வாறான சூழல் இருப்பதாகவும், ஆனால் தடுப்பூசி போட்டுக்கொண்ட விமானிகளை மட்டுமே பணியில் ஈடுபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், தடுப்பூசி மறுக்கும் விமானிகள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் கொரோனா சோதனை முன்னெடுப்பதாகவும், அதன் பின்னரே பணிக்கு திரும்ப இருப்பதாகவும் முன்வைத்த கோரிக்கையை நிர்வாகம் நிராகரித்துள்ளது.
தடுப்பூசி கட்டாயம் என்பதில் இனி மாற்றுக்கருத்தில்லை என குறிப்பிட்டுள்ள சுவிஸ் விமான சேவை நிறுவனம், எஞ்சிய நாடுகளும் இதே நிலைப்பாட்டுக்கு வரலாம் என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், உலக நாடுகளில் கனடா மற்றும் ஹொங்ஹொங்கில் மட்டும் விமானிகள் மற்றும் ஊழியர்களிடம் தடுப்பூசி சான்றிதழ் கேட்கப்படுகிறது.