உணவு வாங்க போதுமான பணம் இல்லாததால் சாப்பாட்டின் அளவைக் குறைத்துக்கொண்ட கனேடியர்கள்: அதிரவைக்கும் ஒரு ஆய்வு
உணவு வாங்க போதுமான பணம் இல்லாததால், கனேடியர்களில் கல்வாசிப்பேர் உணவின் அளவைக் குறைத்துக்கொண்டதாக ஒரு அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
விலைவாசி உயர்வு பாரபட்சம் இல்லாமல் உலகின் அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது.
சுவிட்சர்லாந்தில் இலவச உணவுக்காக வரிசையில் காத்து நிற்கும் மக்கள், ஜேர்மனியில் வாடகை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறும் மக்கள், கனடாவுக்கு புலம்பெயர்ந்துவந்துவிட்டு, விலைவாசி உயர்வை சமாளிக்கமுடியாமல் அமைதியாக சொந்த ஊரை நோக்கி பெட்டி படுக்கையுடன் புறப்படும் மக்கள் என உலகம் முழுவதுமே விலைவாசி உயர்வால் அவதியுறுகிறது.
ஆனால், ஏழை நாடுகள் அன்னாந்து பார்க்கும் சுவிட்சர்லாந்து, கனடா முதலிய நாடுகளிலிருந்துகூட, விலவாசி உயர்வால் உணவுப் பிரச்சினை என்பது போன்ற செய்திகள் வருவது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், சமீபத்தில் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, கனேடிய மக்கள், உணவுப்பொருட்கள் வாங்க போதுமான பணம் இல்லாததால், உணவின் அளவைக் குறைத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள தகவல், அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அது போதாதென்று, மார்ச் 2020க்கும் மார்ச் 2022க்கும் இடையில், கனேடியர்களில் ஐந்தில் ஒருவராவது பட்டினியாக இருந்ததாக கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
Food Banks Canada என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், பசியும் உணவுப் பாதுகாப்பின்மையும் நாடு முழுவதும் அதிகரித்துவருவதாகவும், குறை வருவாய் கொண்ட கனேடியர்கள், பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது கவலையை அளிப்பதாக உள்ளது.