அவர்களை காப்பாற்ற முடியவில்லை... மூடப்பட்ட விமான நிலையம்: காபூலில் கைவிடப்பட்ட பிரித்தானியர்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பு நடவடிக்கைகளை பிரித்தானியா முடித்துக்கொண்டுள்ளதாக அறிவித்த நிலையில், அங்கே சிக்கியுள்ள பிரித்தானியர்களின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் நேற்று முன்னெடுத்த கொடூர தற்கொலை வெடிகுண்டு தாக்குதலானது ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மீட்பு நடவடிக்கைகளை மொத்தமாக சீர்குலைத்துள்ளது.
நேற்றைய தாக்குதலுக்கு பின்னர் பிரித்தானியா அதிரடியாக மீட்பு நடவடிக்கையை முடித்துக் கொண்டதாக அறிவித்ததுடன், காபூல் விமான நிலையத்திற்குள் கடைசியாக வந்து சேர்ந்த 1,000 பேர்களை மட்டும் மீட்டுவர இருப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் உறுதி செய்துள்ளார்.
வெளிநாட்டு ராணுவத்தினரால் மீட்கப்படுவோம் என ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் இன்னமும் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே காத்துக்கிடப்பதாகவும், அவர்கள் அனைவரையும் மீட்க முடியாமல் போயுள்ளது எனவும் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், காபூல் விமான நிலையத்திற்கு வந்து சேர முடியாமல் போன பிரித்தானியர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்க முடியவில்லை என்றார். அனைத்து பிரித்தானியர்களையும் மீட்க முடியாமல் போனது உண்மையில் மிகவும் வருத்தமான ஒன்றுதான் என குறிப்பிட்டுள்ள பென் வாலஸ்,
சுமார் 150 பிரித்தானியர்கள் இன்னமும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கலாம் என்றார். இந்த எண்ணிக்கையானது மாறுபடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில், ஊடகவியலாளர்கள், அந்த நாட்டில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டவர்களும் இருக்கலாம் என்றார்.
தற்போதைய புதிய திட்டத்தின் அடிப்படையில், 800 முதல் 1,100 ஆப்கன் மக்களுக்கு பிரித்தானியாவில் குடியுரிமை அளிக்கப்பட உள்ளது என குறிப்பிட்ட வாலஸ், இதுவரை, கடந்த 2 வார காலத்தில் 8,000 ஆப்கன் மக்கள் உட்பட மொத்தம் 13,000 பேர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இனி ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானிய துருப்புகளை மட்டுமே வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார் பென் வாலஸ்.
தாலிபான்கள் விடுத்துள்ள காலக்கெடுவானது ஆகத்து 31ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.