கும்பமேளாவில் படகு ஓட்டி ரூ.30 கோடி சம்பாதித்தவர்.., அரசுக்கு ரூ.13 கோடி வருமான வரி கட்ட நோட்டீஸ்
மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டிக்கு ரூ.13 கோடி வரி கட்ட வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரி கட்ட நோட்டீஸ்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் திகதி தொடங்கிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ம் திகதி நிறைவடைந்தது.
இந்த கும்பமேளாவில் மொத்தம் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர். இதில் அரைல் பகுதியைச் சேர்ந்தவர் பிந்து மஹ்ரா.
இவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக படகு தொழில் செய்து வருகிறது. கும்பமேளாவுக்காக தனது படகின் எண்ணிக்கையை இருமடங்காக மாற்ற வேண்டும் என்று பிந்து மஹ்ரா எண்ணினார்.
இதற்காக நகைகளை விற்று படகு வாங்க வேண்டுமா என்று முதலில் யோசித்தனர். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் வரும் இடத்திற்கு இது அவசியம் என்று படகு வாங்கினர்.
அப்போது அவருடைய படகில் ஆயிரக்கணக்கான மக்கள் சென்றனர். இது தான் அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. இதன் மூலம் 45 நாட்களில் ரூ. 30 கோடி வருமானம் ஈட்டினார். இதனை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமையுடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், பிந்து மஹ்ராவுக்கு வருமான வரி சட்டம் 1961, பிரிவு 4 மற்றும் 68-ன் கீழ் வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வந்துள்ளது.
அதாவது அவர் 45 நாட்களில் சம்பாதித்த ரூ.30 கோடிக்கு ரூ.12.8 கோடி வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |