பிரித்தானிய தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: இரவுமுழுவதும் போராடிய வீரர்கள்
பிரித்தானியாவில் உள்ள இரும்பு தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நாட்டிங்ஹாமில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் உள்ள உலோக தொழிற்சாலையில், சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
தீயானது சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதுமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், தீயை அணைக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடியுள்ளனர்.
விபத்து குறித்து Nottinghamshire தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எங்களுக்கு இரவு 7.20 மணிக்கு Dunkirk பகுதியில், Harrimans Lane-ல் தீவிபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது" என கூறினார்.
தகவல் கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அதிக அளவு புகை மற்றும் பலத்த காற்று காரணமாக, குடியிருப்பாளர்களை அப்பகுதியை விட்டு வெளியேறவும், முடிந்தவரை ஜன்னல் மற்றும் கதவுகளை மூடுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.
இரவு 11 மணியளவில் வெளிவந்த தகவல்களின்படி, பலமணிநேர போராட்டங்களுக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீயை முழுமையாக அணைக்கும் பணியில் வீரர்கள் இரவு முழுவதும் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன. விபத்தில் உயிரிழப்புகள் மற்றும் சேதாரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், தற்போதையை நிலை குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.



