பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான லிற்றர் பாலை சாக்கடையில் கொட்டும் விவசாயிகள்: தொடரும் சாரதிகள் பிரச்சினை
பிரித்தானியாவில் தொடரும் சாரதிகள் பற்றாக்குறை பிரச்சினையால் பல ஆயிரம் லிற்றர் பாலை சாக்கடையில் கொட்டும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள் விவசாயிகள்.
கனரக ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக, பிரித்தானிய பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பாலைக் கொண்டு செல்ல ட்ரக்குகள் கிடைக்காததால், பல ஆயிரக்கணக்கான லிற்றர் பாலை சாக்கடையில் கொட்டும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
ஒரு பக்கம் ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் இன்னும் ஏராளம் பால் வீணாகும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
பிரித்தானியாவில், சுமார் 100,000 லொறி சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதால், தன் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பாலைக் கொண்டு செல்ல லொறிகள் இல்லாததால், கடந்த இரண்டு மாதங்களில் தான் 40,000 லிற்றர் பாலை வீணாக கீழே கொட்டியதாக மத்திய இங்கிலாந்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பால் உற்பத்தியில் பெரிய லாபம் இல்லாத நிலையில், சிலர் குறைந்த விலைக்கு பால் வாங்கும் நிறுவனங்களுக்கு தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை விற்று வருகிறார்கள்.
குளிர்காலத்தில் பனிப்பொழிவு வேறு இருக்கும் என்பதால், சாரதிகள் இன்னமும் மெதுவாகவே பாலைக் கொண்டு செல்ல முடியும். ஆகவே, நிலைமை இன்னமும் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.