சுவிஸ் பள்ளி வளாகத்தில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர்: விசாரணையில் மிரண்டு போன அதிகாரிகள்
சுவிட்சர்லாந்தில் பள்ளி வளாகம் ஒன்றில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் தொடர்பிலான விசாரணையை முடிவுக்கு கொண்டு வருவதாக அரசு தரப்பு அறிவித்துள்ளது.
ஆனால், குறித்த இளைஞர் மீது இனி விசாரணை முன்னெடுக்கப்படும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் Münchenstein பள்ளி வளாகத்தில் கத்திக் குத்து காயங்களுடன் 16 வயது இளைஞர் மீட்கப்பட்டார். அவருக்கு சம்பவயிடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.
இதனையடுத்து பொலிசார் மற்றும் அரசு தரப்பு சட்டத்தரணிகள் அலுவலகம் உரிய விசாரணையை முன்னெடுத்தது. இதில் அதிரடி திருப்பமாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், இதுவரையான தீவிர விசாரணையின் அடிப்படையில், குறித்த 16 வயது இளைஞரே, இந்த நாடகத்தை நடத்தியதாகவும், தமக்கு தாமே கத்திக்குத்து காயங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் கண்டறிந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றவியல் நடவடிக்கை மற்றும் விசாரணையை முடித்துக் கொள்வதாக சட்டத்தரணிகள் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஆனால், இந்த வழக்கில் இனி குறித்த இளைஞர் மீது விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும், அவரது நோக்கம் தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.