கூடங்குளம் அணுமின் நிலைய ரகசிய ஆவணங்கள் கசிவா? NPCIL விளக்கம்
கூடங்குளம் அணுமின் நிலைய தரவுகள் கசிந்தது தொடர்பாக NPCIL விளக்கமளித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் அங்கு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

2011 ஆம் ஆண்டில், ஜப்பானில் உள்ள புக்குஷிமா டா இச்சி அணுமின் நிலையைத்தில் நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்படுத்திய பாதிப்பிற்கு பின்னர், கூடங்குள அணுஉலைக்கு எதிராக மக்கள் இடிந்தக்கரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் அணுமின் தேவையைப் பூர்த்தி செய்வதில் கூடங்குளம் அணுமின் நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் 4 அலகுகளுக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்ஷர், 2018 ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலையில் 3 மற்றும் 4 ஆம் அலகை வடிவமைத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
அணுமின் நிலைய தரவுகள் கசிவு
இந்நிலையில், பிரபல இணைய ஊடுருவல் கும்பலான ‘வேர்ல்டு லீக்ஸ்’, 8,58,000 ரிலையன்ஸ் நிறுவன கோப்புகளை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான 14.3 ஜிபி அளவுள்ள 19,000 ரகசியக் கோப்புகள் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன.
யோட்டா என்கிற மூன்றாம் தரப்பு இந்திய தரவு சேவை மையத்தின் சர்வரில் இருந்து இருந்த அதன் தரவுகள் கசிந்ததாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாகவும், இது பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும், இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டுமென பலரும் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய அணுசக்தி கழகம்(NPCIL), "ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் காரணமாக, கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக கசிந்ததாகக் கூறப்படும் வரைபடங்கள் 'பேலன்ஸ் ஆஃப் பிளாண்ட்' வசதிகளுடன் தொடர்புடையவை. பாதுக்காப்பு தொடர்பான எந்த வித முக்கியமான தரவுகளும் கசியவில்லை" என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |