அதிகரிக்கும் கொரோனா பரவல்! ராணுவ உதவியை நாடிய பிரபல நாடு!
அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஒன்றரை மாதமாக ஊரடங்கு அமுலில் உள்ளது.
இருப்பினும், சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) அதிகரித்தது.
இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் சுமார் 300 இராணுவ பாதுகாப்பு படையினர் சிட்னியில் நிறுத்தப்படவுள்ளனர்.
டெல்டா வகை கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில் பெருந்தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அவுஸ்திரேலியா திணறி வருகிறது.
இதன் காரணமாக, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக பொருளாதாரம் மந்தநிலையில் தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் (Gladys Berejiklian) கூறுகையில், "ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 239 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. நிலைமை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு முன்பு இன்னும் மோசமாக மாறவுள்ளது.
தென்மேற்கு சிட்னியில் அமலில் உள்ள கடுமையான ஊரடங்கு நகரின் மேற்கு பகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள உயர் நிலை பகுதிகளில் பயிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் மற்ற பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.