கார்த்திகா உள்ளிட்ட நிர்வாகிகள் கைது.., நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
Ntk announces protest against the gov- தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் கார்த்திகா.
இந்நிலையில், கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியினர் 9 பேரை காவல்துறை நேற்று கைது செய்துள்ளது.
இவர்கள் மீது 12க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களின் கைதிற்கு பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வரும் சனிக்கிழமையன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெளியிட்டுள்ள அறிக்கை..,
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளரும் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.கார்த்திகா, அவரது கணவரும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக.சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை.மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்து சிறைப்படுத்தி இருக்குக்கிறது தவெக அரசு.
இந்த அடக்குமுறையைக் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற ஐப்பசி 07ஆம் நாள் 24-10-2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.
இக்கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |