வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர் கொடுப்பேன் - நாம் தமிழர் பொதுக்குழுவில் சீமான் பேச்சு
வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தர போகிறேன் என நாம் தமிழர் பொதுக்குழுவில் சீமான் பேசியுள்ளார்.
நாம் தமிழர் பொதுக்குழு
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் இன்று நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழுவில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழு தீர்மானங்கள்
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் அவசரகதியில் கொண்டு வரப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையாக எதிர்க்கிறது.
எந்தத் திட்டமிடலும், ஒரு தொலை நோக்குமில்லாது முழுக்க முழுக்கத் தங்களது வாக்கரசியல் கணக்குகளுக்காகக் குறுகிய காலத்தில் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்டு ஏறக்குறைய கோடி வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்திருப்பதென்பது ஏற்கவே முடியாத சனநாயகப்படுகொலையாகும்.

இத்தோடு, பீகாரைச் சேர்ந்த வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைக்கிற ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் முயற்சியானது தமிழர் தாயகத்தைக் கலப்பினத் தாயகமாக மாற்றி, ஆக்கிரமிக்க முனையும் மாபெரும் சூழ்ச்சியாகும். அதனை நாம் தமிழர் கட்சி இப்பொதுக்குழுவின் வாயிலாக மிகக்கடுமையாக எதிர்க்கிறது.
தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வடமாநிலத்தவரின் எண்ணிக்கை, பணி புரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச் சீட்டு (ILP Inner Line Permit ) முறையை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலமற்ற உரிமை மறுக்கப்பட்ட ஆதித்தொல்குடிமக்ககளின் மீட்சிக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் மொத்தமும் இன்றைக்கு அபகரிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன.
தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட இருபெரும் திராவிடக் கட்சிகளும் அதனை மீட்டெடுப்பது குறித்து எவ்வித அக்கறையுமற்று இருக்கின்றன. நாம் தமிழர் ஆட்சி மலர்கிறபோது, பஞ்சமர் நிலங்கள் யாவற்றையும் கண்டறிந்து, மீட்டெடுத்து, அந்நிலங்களுக்குரிய ஆதித்தொல்குடிமக்களுக்கு வழங்குவோம்.
வடலூர் பெருவெளியைக் கையகப் படுத்தும் முடிவை திமுக அரசு கை விட வேண்டும். வள்ளலார் பன்னாட்டு மையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு தரும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறையவேற்றப்பட்டுள்ளது.
சீமான் பேச்சு
இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "பள்ளியில் அரசியல் பேசக் கூடாது, கல்லூரியில் அரசியல் பேசக் கூடாது.. ஆனால் சினிமா பேசலாம் கல்லூரி விழாக்களுக்கு நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் வருகிறார்கள்.
அந்த மேடைகளில் மொழி சார்ந்து, வளம் சார்ந்து, பண்பாடு சார்ந்து பாட்டு இருக்காது. திரைப்பாட்டு அதற்கு நடனம் மட்டுமே இருக்கும் இந்த திரைக்கவர்ச்சி ஒரு மதமாக மாறி நிக்குது.

இறை வழிபாட்டை விமர்சித்த கட்சிகள், திரை வழிபாட்டை போற்றிவிட்டார்கள். கதாநாயகன் வழிபாட்டை கடவுள் வழிபாட்டை விட மேலானதாக கட்டமைத்துவிட்டார்கள். நல்லக்கண்ணு யாரென்று தெரியவில்லை. நடிகர் நாடாள தயாராகிவிட்டார்.
எல்லாமே பெரியார் என்பவர்கள் அந்தப் பக்கம் இருங்கள், ஒருவர்கூட எனக்கு ஓட்டுபோட வேண்டாம். என் இனத்தின் முன்னோர்கள் ஒவ்வொருவரும் பெரியார் என்பவர்கள் இந்தப் பக்கம் வாருங்கள், எனக்கு ஓட்டுபோடுங்கள்.
திராவிடர்கள் நாங்கள் என்று எண்ணுபவர்கள் ஒருவர்கூட எனக்கு ஓட்டுபோட வேண்டாம். தமிழர்கள் நாங்கள் என்று எண்ணுபவர்கள் எனக்கு ஓட்டுபோடுங்கள்.
அந்த பக்கம் இலவச தொலைக்காட்சி, மிதிவண்டி, மடிக்கணினி, அரிசி எல்லாம் கொடுத்துட்டாங்க. இந்த பக்கம் நம்ம தம்பி விஜய் ஒரு மடி மேல போய் பைக், கார் கொடுப்பதாக சொல்லி விட்டார்.
அதனால் நானும் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தர போகிறேன். ரோடு சரியில்லை என்றால் ஹெலிகாப்டரில் பறந்து போய்டலாம். இலவசம் என்பது வளர்ச்சித்திட்டம் இல்லை அது வீழ்ச்சித்திட்டம், தேசத்தை நாசமாக்கும் ஒரு திட்டம் இலவசம்.
இலவசத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது? வளர்ச்சியை கொண்டுவந்தால் இலவசமாக நீங்கள் தரும் அனைத்தையும் அவரவர் அவரவர் பணத்தில் வாங்கிக்கொள்வர்" என பேசினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |