அரைகுறை ஆடை புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாம் என்ற அச்சம்: பிரான்ஸ் பெண்கள் எடுத்துள்ள முடிவு
முத்தத்துக்கும், மேலாடை இன்றி சூரியக்குளியல் எடுப்பதற்கும் பேர்போன நாடு பிரான்ஸ் என்பதை உலகமே அறியும்.
ஒரு காலகட்டத்தில், அதாவது 1960களில், பெண் உரிமையின் அடையாளமாக மேலாடையின்றி சூரியக்குளியல் எடுக்கத்துவங்கி, பிறகு அதை பாரம்பரியமாகவே பின்பற்றினார்கள் பிரான்ஸ் பெண்கள்.
சென்ற ஆண்டு ஆகத்து மாதம் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுத்துக்கொண்டிருந்த இரண்டு பெண்களை அணுகிய பொலிசார், ஆடை அணிந்துகொள்ளும்படி அவர்களை வற்புறுத்தியதால் பிரான்சில் பெரும் பிரச்சினை வெடித்தது. பொதுமக்கள் கொந்தளிக்க, அரசியல்வாதிகள் கண்டிக்க, மேலாடையின்றி சூரியக் குளியல் போட்ட பெண்களை கண்டித்தது நமது கலாச்சாரத்துக்கே ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் என கொந்தளித்தார் ஒரு அரசியல்வாதி.
எல்லாவற்றிற்கும் மேல், பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin பொலிசார் செய்தது தவறு என கண்டனம் தெரிவித்து, அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார்.
இப்படி அரைகுறை ஆடை சூரியக்குளியலுக்கு பிரசித்தி பெற்ற நாடான பிரான்சில், தற்போது மேலாடையின்றி சூரியக்குளியல் எடுப்பது குறைந்து வருவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது பிரான்சில் ஐந்தில் ஒரு பெண் மட்டுமே கடற்கரையில் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுப்பதில் தனக்கு பிரச்சினை ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ள நிலையில், 50 சதவிகித பிரெஞ்சு பெண்கள், ஆண்களால் தொந்தரவுக்குள்ளாகலாம் என்ற அச்சத்தில் சூரியக்குளியலின்போது நீச்சல் உடை அணிந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.
1984இல் 40 சதவிகிதம் பெண்களும், 2009இல் 34 சதவிகிதம் பெண்களும் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுத்த நிலையில், தற்போது 19 சதவிகிதத்தினர் மட்டுமே தாங்கள் அவ்விதம் செய்வோம் என்று கூறியுள்ளார்கள்.
48 சதவிகிதம் பெண்கள், ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகலாம் என்ற அச்சம் காரணமாக மேலாடையின்றி சூரியக்குளியல் எடுப்பதைத் தவிர்ப்பதாக கூறியுள்ள நிலையில், சமூக ஊடகங்கள் பிரபலமான பிறகு, பல்வேறு பிரபலங்களின் அரை குறை ஆடை படங்கள் கூட உலகமெங்கும் பகிரப்பட்டு வருவது சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது.
ஆகவே, தாங்கள் மேலாடையின்றி சூரியக்குளியல் எடுக்கும்போது, அதை யாரேனும் இரகசியமாக புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துவிடலாம் என்ற ஒரு அச்சம் இப்போது பிரான்ஸ் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. 46 சதவிகிதம் பேர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்கள்.
அதே நேரத்தில், இன்னொருபக்கம், 53 சதவிகிதம் பெண்கள் தோல் புற்றுநோய் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக நீச்சல் உடையில் சூரியக்குளியல் எடுப்பதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.