சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி பெறாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, கடந்த நான்கு வாரங்களில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களில் பாதி பேர் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள்.
மேலோட்டமாக பார்க்கும்போது, கொரோனா தடுப்பூசிகள் சரியாக வேலை செய்யாதது போலவே தோன்றினாலும், அவை கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பை 87 சதவிகிதம் வரை குறைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் 14 வரையிலான நான்கு வாரக் கணக்கீட்டின்படி, சுவிட்சர்லாந்தில் 525 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். பொதுவாக பார்த்தால், அப்படி உயிரிழந்தவர்களில் தடுப்பூசி பெற்றவர்கள் பாதி, தடுப்பூசி பெறாதவர்கள் பாதி. ஆனால், உயிரிழந்தவர்களை வகைப்படுத்திப் பார்க்கும்போது, தடுப்பூசியின் உயிர் காக்கும் திறனைக் கண்டுகொள்ளலாம்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களில், கிட்டத்தட்ட அனைவருமே 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்களே. இந்த வயதினரில், 88 சதவிகிதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளார்கள், 1 சதவிகிதத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் பெற்றுக்கொண்டவர்கள், 11 சதவிகிதத்தினர் தடுப்பூசி பெறாதவர்கள்.
அதன் பொருள் என்னவென்றால், கடந்த நான்கு வாரங்களில் சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் 60 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய, ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பூசி பெறாதவர்களே! உண்மையில், இந்த வயதினரில், தடுப்பூசி பெறாதவர்கள், தடுப்பூசி பெற்றவர்களை விட 7.53 மடங்கு அதிகம் உயிரிழந்துள்ளார்கள்.
ஆக, கொரோனா தடுப்பூசிகளில் சிறு குறைபாடுகள் இருக்கலாம். என்றாலும், இப்போதைக்கு அவை நிச்சயம் தங்கள் வேலையை ஒழுங்காக செய்கின்றன, அதாவது மக்கள் கொரோனாவால் உயிரிழப்பதைத் தடுக்கின்றன எனலாம்.