கனடாவுக்குச் செல்லும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது: இழப்பை சந்திக்கும் கனடா
கனடா இந்தியா தூதரக உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
கனடா இந்தியா மோதல்
கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடந்து, இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இதனால் இரு நாடுகளும் மற்ற நாட்டின் தூதர்களை வெளியேறும்படி கூற, பிரச்சினை பெரிதானதே தவிர, இதுவரை முடிவுக்கு வரவில்லை.
சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது
இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினைகளால் அடுத்து என்ன ஆகுமோ என கவலைப்பட்ட மாணவர்கள், கனடாவை விட்டு விட்டு மற்ற நாடுகள் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள்.
கனடாவும், இந்திய மாணவர்களுக்கு வழங்கும் கல்வி அனுமதிகளைக் குறைக்க, விளைவு? கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டு நிலவரப்படி, கனடாவுக்குக் கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 86 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதாவது, முந்தைய காலாண்டில் 108,940 கல்வி அனுமதிகள் கனடா தரப்பிலிருந்து இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், நான்காவது காலாண்டில் வெறும் 14,910 கல்வி அனுமதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
கனடாவுக்கு இழப்பு
இந்தியாவைப் பொருத்தவரை, மாணவர்கள் ஏற்கனவே வேறு நாடுகள் பக்கம் தங்கள் கவனத்தைச் செலுத்தத் துவங்கிவிட்டார்கள். அதனால், அவர்களுக்கு ஏற்படும் நஷ்டம் அவ்வளவு பெரியதல்ல.
ஆனால், இந்திய மாணவர்கள் கனடாவுக்குக் கல்வி கற்கச் செல்லாவிட்டால், அது கனடாவின் பொருளாதாரத்துக்கு பெரிய இழப்பு ஆகும். காரணம், கனடாவில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில், 2022 ஆம் ஆண்டு கணக்கின்படி, 41 சதவிகிதம், அல்லது 225,835 பேர், இந்திய மாணவர்கள் ஆவர்.
இந்த மாணவர்கள், கனடாவின் பொருளாதாரத்துக்கு பெரிய பலமாக உள்ளார்கள். ஆண்டொன்றிற்கு, சர்வதேச மாணவர்களால், சுமார் 22 பில்லியன் டொலர்கள் வருவாய் கனடாவுக்குக் கிடைக்கும் நிலையில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவது, நிச்சயம் கனடாவுக்கு பெரிய இழப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |