கல்லூரி மாடியிலிருந்து குதித்த நர்சிங் மாணவி மரணம்., உறவினர்கள் சாலை மறியல்
கல்லூரி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நர்சிங் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நர்சிங் மாணவி
தழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பழையபட்டியைச் சேர்ந்தவர் மாணவி கார்த்திகா ஜோதி (19). இவர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் சாலை, செம்மடைபட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி முதலாமாண்டு நர்சிங் படித்து வந்தார்.
கடந்த 21-ஆம் திகதி காலையில் கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் மாணவி கார்த்திகா ஜோதி படுகாயமடைந்தார்.
சிகிச்சை பலனின்றி மரணம்
இதனையடுத்து மாணவி ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பொலிஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, சக மாணவிகளிடம் விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், நேற்று கார்த்திகா ஜோதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் கன்னியப்பன் - பழனியம்மாள் மற்றும் உறவினர்கள் ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், கல்லூரி நிர் வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் மாணவியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து மறியலைக் கைவிட்டனர்.
இதையடுத்து மாணவியின் உடல், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.