அசுர வேகத்தில் பாயும் Nvidia நிறுவனம்... இன்னொரு உலக சாதனை தடாலடியாக முறியடிப்பு
செயற்கை நுண்ணறிவுத் துறை மற்றும் அதிரடியான அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றம் ஆகியவற்றால், உலகின் முதல் 5 டிரில்லியன் டொலர் நிறுவனமாக Nvidia சாதனை படைத்துள்ளது.
அசுர வளர்ச்சி
மூன்று மாதங்களுக்கு முன்புதான், சிலிக்கான் வேலி சிப்மேக்கர் நிறுவனமான Nvidia சந்தை மதிப்பில் 4 டிரில்லியன் டொலர் என்ற வரலாற்று சாதனையைப் பதிவு செய்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, ஒப்பீட்டளவில் Nvidia சந்தை மதிப்பு என்பது இந்தியா, ஜப்பான் மற்றும் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்றே குறிப்பிட்டுள்ளது.
பல சிப்மேக்கர் நிறுவனங்களை விட Nvidia நிறுவனத்தின் அசுர வளர்ச்சி என்பது எட்ட முடியாத உயரத்தில் உள்ளது. புதன்கிழமை அமெரிக்க பங்குச் சந்தைகள் செயல்படத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, என்விடியாவின் பங்குகள் 207.86 டொலரைத் தொட்டன.
இதனையடுத்து அதன் சந்தை மதிப்பு 5.05 டிரில்லியன் டொலர் என பதிவானது. செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகள் மற்றும் மென்பொருளை இயக்குவதில் மிகவும் மேம்பட்டதாகக் கருதப்படுகிறது என்விடியாவின் சிப்கள்.

6G தொழில்நுட்பத்தில்
இதனாலையே, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நிறுவனத்தின் பங்கு விலை மிக வேகமாக அதிகரித்து வந்துள்ளது. இதனிடையே, செவ்வாயன்று, என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், 500 பில்லியன் டொலர் சிப் ஆர்டர்களை வெளியிட்டார்.
மட்டுமின்றி, ரோபோடாக்சிஸ் மற்றும் உபெர் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளதுடன் நோக்கியா நிறுவனத்தில் 1 பில்லியன் டொலர் முதலீட்டையும் Nvidia அறிவித்தது.

நோக்கியா மற்றும் Nvidia இணைந்து 6G தொழில்நுட்பத்தில் பணியாற்ற திட்டமிட்டுள்ளனர். மட்டுமின்றி, கடந்த மாதம், Nvidia கூட்டாண்மையின் ஒரு பகுதியாக OpenAI நிறுவனத்தில் 100 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |