இது போர்க் குற்றம்... மதுரோவின் கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நியூயார்க்கின் புதிய மேயர்
வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்காவின் முன்னெப்போதும் இல்லாத இராணுவ நடவடிக்கையையும், அதன் ஜனாதிபதி மதுரோ கைது செய்யப்பட்டதையும் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி கண்டித்துள்ளார்.
எதிர்ப்பைத் தெரிவித்ததாக
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துவதை, போருக்கு நிகரான நடவடிக்கை என்றும் மம்தானி குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுலா மீது அமெரிக்காவின் தலையீட்டைக் கடுமையாக விமர்சித்த மம்தானி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நேரடி உரையாடலில் இந்த நடவடிக்கைக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்ததாகக் கூறினார்.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துவது ஒரு போர்க் குற்றச் செயலாகும், மேலும் இது ஃபெடரல் மற்றும் சர்வதேச சட்டங்களின் மீறலாகும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் மம்தானி சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்கா நடத்திய ஒரு பெரிய அளவிலான தாக்குதலின் போது, மதுரோவும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கருத்துகளின் அடிப்படையில், அவர்கள் இருவரும் நியூயார்க்கில் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வார்கள் என்றும், மதுரோ அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும், அமெரிக்கா தற்காலிகமாக அந்த நாட்டை நிர்வகிக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

நேரடியாகப் பாதிக்கிறது
ட்ரம்பின் கருத்துகளுக்குப் பதிலளித்துள்ள மம்தானி, அரசாங்க மாற்றத்திற்கான இந்த அப்பட்டமான முயற்சி வெளிநாடுகளில் உள்ளவர்களை மட்டும் பாதிக்கவில்லை; இந்த நகரத்தைத் தங்கள் வீடாகக் கருதும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டினர் உட்பட, நியூயார்க் நகர மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கிறது என்றார்.
மட்டுமின்றி, தனது கவனம் அவர்களின் பாதுகாப்பிலும், ஒவ்வொரு நியூயார்க்வாசியின் பாதுகாப்பிலும்தான் உள்ளது. எனது நிர்வாகம் இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் என்றார்.

இதனிடையே, செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், அமெரிக்கா வெனிசுலாவை தற்காலிகமாகத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகக் கூறினார்.
மட்டுமின்றி, வெனிசுலா மக்களின் நலன்களை மனதில் கொள்ளாத ஒருவர் வெனிசுலாவின் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை நாம் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |