மகளிர் அணிக்கு ஆடவருக்கு நிகரான ஊதியம்! உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதல்முறை..குவியும் பாராட்டு
நியூசிலாந்தில் ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு நிகரான ஊதியம், பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் விளையாட்டு ரீதியாக முதல் முறையாக ஒரே ஒப்பந்தத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர்.
அதாவது, அந்நாட்டு ஆடவர் கிரிக்கெட் வீரர்களுக்கு நிகரான ஊதியம் இனி மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும்.
கிரிக்கெட் வரலாற்றில் இந்த அறிவிப்பு முதல் முறையாகும். இதன்படி, கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஐந்தாண்டு கால சம ஊதியம் பெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
'ஆண்களுக்கு இணையாக, சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பெண் வீராங்கனைகள் ஒரே ஒப்பந்தத்தில் அங்கீகாரம் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு பெரிய முன்னேற்றம்' என நியூசிலாந்து மகளிர் அணியின் கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய மாற்றத்தால் உள்நாட்டுப் பெண் வீராங்கனைகளின் ஒப்பந்த எண்ணிக்கை 54ல் இருந்து 72 ஆக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீராங்கனைகள் பலர் இந்த முடிவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.