105 பந்துகளில் 16 ரன் எடுத்த வீரர்: 323 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மே.தீவுகள் படுதோல்வி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 323 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
462 ஓட்டங்கள் இலக்கு
பே ஓவல் மைதானத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. 
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 575 ஓட்டங்கள் குவிக்க, மேற்கிந்திய தீவுகள் 420 ஓட்டங்கள் எடுத்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து 306 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 462 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜான் கேம்பல் (John Campbell) மற்றும் பிரண்டன் கிங் (Brandon King) நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர்.
கிங் அரைசதம்
அரைசதம் அடித்த பிரண்டன் கிங் 13 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே கேம்பல் 105 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 
இந்தக் கூட்டணி 197 பந்துகளில் 87 ஓட்டங்கள் சேர்த்தது. அடுத்து வந்த கவேம் ஹாட்ஜ் (0), ஷாய் ஹோப் (3), அதனசி (2), கிரேவ்ஸ் (0) மற்றும் சேஸ் (5) ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
டெவின் இம்லாக் மட்டும் நின்று ஆட, ஏனைய வீரர்கள் ஆட்டமிழந்ததால் மேற்கிந்திய தீவுகள் 138 ஓட்டங்களுக்கு (80.3 ஓவர்கள்) சுருண்டது. ஜேக்கப் டுஃபி 5 விக்கெட்டுகளும், அஜாஸ் பட்டேல் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
கடைசிவரை களத்தில் நின்ற இம்லாக் 90 பந்துகளில் 15 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
நியூசிலாந்து அணி 323 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டெவோன் கான்வே ஆட்டநாயகன் விருதும், ஜேக்கப் டுஃபி தொடர் நாயகன் விருதும் பெற்றனர். 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |