வெறும் 60 ரன்களுக்கு ஆல் அவுட்...! நியூசிலாந்தை ஊதி தள்ளி டாக்காவில் வரலாறு படைத்தது வங்க தேசம்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று வங்க தேசம் வரலாறு படைத்துள்ளது.
வங்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 போட்டி இன்று டாக்காவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 60 ரன்களுக்கு சுருண்டது.
டாம் ப்ளண்டெல் (2), ராசின் ரவீந்திரா (0), வில் யங்(5), டி கிராண்ட்ஹோம் (1), டாம் லாதம் (18), ஹென்றி நிக்கோல்ஸ் (18), Cole McConchie (0), பிரேஸ்வெல் (5), அஜாஸ் படேல் (3), ஜேக்கப் டஃபி (3). இறுதிவரை ஆட்டமிழக்காமல் பிளேயர் டிக்னர் 3 ரன்கள் எடுத்தார்.
வங்க தேசம் தரப்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
ஷாகிப் அல் ஹசன், நசும் அகமது, முகமது சைஃபுதீன் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். மகேதி ஹசன் 1 விககெட் எடுத்தார்.
61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்க தேசம் அணி, 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழத்தியது.
டி-20 வரலாற்றில் முதன் முறையாக நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது வங்க தேசம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியை 4-1 என வீழ்த்தி தொடரை கைப்பற்றி வங்க தேசம் வரலாற்று சாதனை படைத்தது நினைவுக் கூரத்தக்கது.