வித்தை காட்டிய வில்! 30 ஓவரில் 245 இலக்கு..போராடி தோல்வியுற்ற வங்கதேசம்
வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வில் யங் சதம்
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி Dunedinயின் யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
ஆனால் மழை குறுக்கிட்டதால் இரு அணிகளுக்கு 30 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றி அமைக்கப்பட்டது. நியூசிலாந்தின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா, ஹென்றி நிக்கோலஸ் ஆகிய இருவரும் சொரிபுல் இஸ்லாமின் முதல் ஓவரிலேயே ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
எனினும் கேப்டன் டாம் லாதம் (Tom Latham) மற்றொரு தொடக்க வீரர் வில் யங் (Will Young) உடன் கூட்டணி அமைத்தார்.
இவர்களின் அதிரடி ஆட்டத்தினால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சதத்தினை நோக்கி பயணித்த லாதம் 92 (77) ஓட்டங்களில் மெஹிதி ஓவரில் போல்டு ஆனார்.
அவரைத் தொடர்ந்து வந்த சாப்மேன் 20 (11) ரன்களில் அவுட் ஆக, வில் யங் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தினை பதிவு செய்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 30 ஓவரில் 239 ஓட்டங்கள் குவித்தது. வில் யங் 84 பந்துகளில் 4 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்கள் எடுத்தார்.
வங்கதேசம் தோல்வி
DLS விதிமுறையின்படி வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக 245 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்க வீரர் சவுமியா சர்க்கார் சொதப்ப, ஷாண்டோ 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் அனாமுல் (43), தாஸ் (22), ஹிரிடோய் (33) ஆகியோர் வெற்றிக்காக போராடினர்.
கடைசி கட்டத்தில் அபிஃப் ஹொசைன் அதிரடியாக 38 (28) ஓட்டங்களும், மெஹிடி ஹசன் 28 (21) ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆனால் வங்கதேசம் 30 ஓவரில் 200 ஓட்டங்கள் மட்டுமே எடுத்ததனால், நியூசிலாந்து 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |