முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் - யார் தெரியுமா?
ஐபிஎல் தொடரில் முதல்முறையாக 2 வீரர்கள் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது.
இதில் பல எதிர்பாராத சம்பவங்களும் நிகழ்ந்தன. குறிப்பாக சுரேஷ் ரெய்னா, ஸ்டீவ் ஸ்மித்,ஷகிப் அல் ஹசன் உள்ளிட்ட சீனியர் வீரர்களை சொந்த அணி கூட ஏலத்தில் வாங்க முன்வரவில்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே வழக்கம்போல ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை போட்டிப் போட்டி ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுத்தன. பொல்லார்டு, பிராவோ, ஜேசன் ஹோல்டர், ஹெட்மயர், எவின் லெவிஸ் உள்ளிட்ட 11 வீரர்கள் இந்த ஏலத்தில் வாங்கப்பட்டார்கள்.
இதில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் அசத்திய இரு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒருவர் ஒருநாள் தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர் ஒடியன் ஸ்மித் தான். கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரிலும் இவர் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஸ்மித்தை பஞ்சாப் அணி ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இதேபோல் மிடில் ஆர்டரில் களமிறங்கி சிக்சர்களை பறக்க விடுவதில் வல்லவரான ரொமாரியோ செபார்ட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.7.75 கோடிகளுக்கு வாங்கியுள்ளது.