உடனடியாக புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு பணி வழங்குங்கள்... பிரித்தானிய அமைப்பு ஒன்று அரசுக்கு அவசர அழைப்பு
உடனடியாக புலம்பெயர்தல் விதிகளை நெகிழ்த்தி, புலம்பெயர்ந்தோருக்கும், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் பணி வழங்குமாறு அரசு அமைப்பு ஒன்று ஆலோசனை கூறியுள்ளதாக ஒரு ஆச்சரிய தகவல் பிரித்தானியாவிலிருந்து வெளியாகியுள்ளது.
இதுவரை, பிரித்தானிய உள்துறை செயலர் பிரீத்தி பட்டேல் புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார், எடுக்கப்போகிறார் என்பது குறித்த செய்திகள்தான் அடிக்கடி பிரித்தானிய தரப்பிலிருந்து வரும்.
ஆனால், இம்முறை, புகலிடக்கோரிக்கை வைத்துள்ளவர்கள் பதிலுக்காக காத்திருக்கும்போதே, அவர்களுக்கு பணி வழங்குங்கள் என பிரீத்திபட்டேலுக்கே ஆலோசனை வழங்கியுள்ளது புலம்பெயர்தல் ஆலோசனைக் கமிட்டி (The Migration Advisory Committee - MAC) என்ற பிரித்தானிய அமைப்பு.
ஆனால், ஒரு விடயத்தை கவனித்திருக்கலாம். அது எந்த நாடானாலும் சரி (அல்லது பெரும்பாலான நாடுகள் என்று வைத்துக்கொள்வோம், காரணம், 2015ஆம் ஆண்டு, ஜேர்மனி எந்த பலனும் எதிர்பார்க்காமலே புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதித்ததை யாராலும் மறக்க இயலாது), பொதுவாக, புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்கும்போது, இரண்டு விடயங்கள் பொதுவாக கவனிக்கப்படும்.
ஒன்று, நாட்டுக்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்வோரால் நாட்டுக்கு நன்மை வருமா. இரண்டு, அவர்களால் நாட்டுக்கு செலவு ஏற்படுமா? இந்த இரண்டு கேள்விகளை கருத்தில் கொள்ளாத நாடுகள் குறைவு என்றே கூறலாம்.
பிரித்தானியா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? தற்போது, முதியோர் மற்றும் இயலாமையிலிருப்போர், குழந்தைகள் முதலானவர்களுக்கு உதவும் பணியாளர்களுக்கு (social care sector) பிரித்தானியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆகவே, அந்த துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக புலம்பெயர்ந்தோரை பணி செய்ய அனுமதிக்குமாறு புலம்பெயர்தல் ஆலோசனைக் கமிட்டி பிரீத்தி பட்டேலுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஆனாலும், நாட்டை விட்டு வெளியேறி இன்னொரு நாட்டுக்குச் சென்று அங்கு பிழைத்துக்கொள்ளலாம் என்ற கனவில் வந்தவர்களை காத்திருப்புப் பட்டியலில் வைத்து, புகலிடம் கிடைக்குமா கிடைக்காதா, புது வாழ்வு கிடைக்குமா அல்லது மீண்டும் வந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி விடுவார்களா என்ற கேள்விகளுடன் காத்திருக்கும் பலர் இருக்கும் நிலையில், புகலிடக்கோரிக்கை பதிலுக்காக காத்திருக்கும்போதே அவர்களுக்கு பணி வழங்குங்கள் என்று ஒரு அமைப்பு கூறியுள்ளதாக வெளியாகியுள்ள இந்த செய்தி புலம்பெயர்ந்தோருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் நிச்சயம் நல்ல செய்திதான்.
சரி, விடயத்துக்கு வருவோம்...
அதாவது, தற்போதைய விதிகளின்படி, புகலிடக்கோரிக்கையாளர்கள், புகலிடம் கோரி விண்ணப்பித்து, பதிலுக்காக காத்திருந்து, 12 மாதங்கள் ஆனபிறகே குறிப்பிட்ட சில பணிகளுக்கு செல்ல முடியும்.
ஆனால், அந்த கால வரையறை எதுவுமின்றி, விதிகளை நெகிழ்த்தி, புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் உடனடியாக முதியோர், இயலாமையிலிருப்போர், குழந்தைகள் முதலானவர்களுக்கு உதவும் துறையில் பணி வழங்குமாறு புலம்பெயர்தல் ஆலோசனைக் கமிட்டி ஆலோசனை கூறியுள்ளது.
உள்துறை அலுவலகமோ, புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எளிதில் பணி கிடைக்க வழிவகை செய்வது, சட்டவிரோத புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்கு வரத்தூண்டும் ஒரு விடயமாக ஆகிவிடுமோ என அஞ்சுகிறது.
ஆனால், அப்படிப்பட்ட பயங்கள் நிதர்னமல்ல என்று கூறியுள்ள புலம்பெயர்தல் ஆலோசனைக் கமிட்டி, மாறாக, தற்போது புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள், அவர்கள் பிரித்தானியாவுடன் ஒருங்கிணைந்து வாழும் திறனை பாதித்துள்ளதாகவும், சொல்லப்போனால், அது பிரித்தானிய பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆகவே, முதியோர், இயலாமையிலிருப்போர், குழந்தைகள் முதலானவர்களுக்கு உதவும் துறையில் நிலவும் கடுமையான பணியாளர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, உடனடியாக புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு பணி வழங்குமாறு தாங்கள் பரிந்துரைப்பதாக புலம்பெயர்தல் ஆலோசனைக் கமிட்டி தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரித்தானியாவில் எந்தெந்த துறைகளில் பணியாளர்கள் தட்டுப்பாடு உள்ளது என்பதைக் காட்டும் பட்டியலில், முதியோர், இயலாமையிலிருப்போர், குழந்தைகள் முதலானவர்களுக்கு உதவும் துறையையும் சேர்க்குமாறு புலம்பெயர்தல் ஆலோசனைக் கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது.
அப்படி, பணியாளர்கள் தட்டுப்பாடு உள்ள துறைகள் பட்டியலில் ஒரு துறை சேர்க்கப்படும்போது, அத்துறையின் கீழ் பணி செய்வதற்காக, புலம்பெயர்ந்தோர் விசாக்கள் பெறும் நடைமுறை எளிதாகும் என்பதுடன், அத்தகைய பணி செய்வோருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் கூட இருக்காது என்பது கூடுதல் தகவலாகும்!