பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர்
பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகளை தனது காரில் அழைத்துச் சென்று கல்வி அலுவலர் உதவியுள்ளார்.
மாணவிகளுக்கு உதவி
தமிழகம் முழுவதும் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் 108 தேர்வு மையங்களில் 23 ஆயிரத்து 71 மாணவ மாணவிகள் பிளஸ் -2 தேர்வை எழுதுகின்றனர்.
இன்று காலை 10:15 மணிக்கு பிளஸ் -2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், தேர்வை பார்வையிடுவதற்காக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு வருகை தந்திருந்தார்.
அப்போது அந்த தேர்வு மையத்திற்கு தனி தேர்வு எழுதும் 3 மாணவிகள் ஹால் டிக்கெட்டை எடுத்துக் கொள்ளாமல் வந்திருந்தனர். மேலும், அவர்கள் தேர்வு எழுதும் மையம் தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்ததும் தெரிய வந்தது.
ஆனால் அவர்கள், தவறுதலாக பன்னீர்செல்வம் பார்கில் உள்ள அரசு பெண்கள் தேர்வு மையத்திற்கு வந்திருந்தனர். இதனால் அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர்.
உடனே அவர்களிடம் பேசிய கல்வி அலுவலர் சுப்பாராவ் பதற்றப்படாமல் இருங்கள் என்றுகூறி, பள்ளி அலுவலகத்தில் உள்ள கணினி மூலம் 3 மாணவிகளுக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.
இதையடுத்து, தனது கார் மூலமாக தில்லை நகரில் உள்ள தனியார் பள்ளிக்கு அழைத்து சென்று 3 மாணவிகளையும் தேர்வு எழுத உதவினார். பின்னர், அம்மாணவிகள் கல்வி அலுவலருக்கு நன்றி தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |