ஆகஸ்ட்-15 அறிமுகமாகும் அட்டகாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! விலை எவ்வளவு தெரியுமா?
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15-ஆம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் Ola தனது வரவிருக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
முன்பதிவு தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்குள் 1,00,000 முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்தது, இது உலகிலேயே அதிக முன்பதிவு செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும்.
இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனத்தை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று வாகனத்தை விநியோகிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஓலா நிறுவனம் மேலும் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15-ஆம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்கம், விலை உள்ளிட்ட விவரக்குறிப்புகளை கீழே பார்க்கலாம்.
1) வேரியண்ட் (Variants):
வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பொறுத்து ஓலா நிறுவனம் மூன்று வகைகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. முதல் வேரியண்ட் 2kW மோட்டார் கொண்டிருக்கும், இந்த வேரியண்டின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 45 கிமீ ஆகும். இரண்டாவது வேரியண்ட் 4kW மோட்டார் கொண்டிருக்கும், இது 70 கிமீ வேகத்தில் செல்லும். கடைசி மற்றும் டாப்-எண்ட் வேரியன்ட் 7kW மோட்டருடன் 95 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2.வரம்பு (Range):
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களால் சாதாரணமாக 130-150 கிலோமீட்டர் தூரத்தை அடைய முடியும். ஓலா ஸ்கூட்டரின் உச்சகட்ட வரம்பு 240 கிலோமீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3) சார்ஜ் நேரம் (Charging Time):
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் சார்ஜிங் நிலையத்தில், பூஜ்ஜியத்திலிருந்து முழுமையாக சார்ஜ் செய்ய இரண்டரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஹைப்பர் சார்ஜிங் நிலையத்தில், அதன் பேட்டரிகளை வெறும் 18 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யலாம். வீட்டில் வழக்கமான பிளக்கைப் பயன்படுத்தி, ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய ஐந்தரை மணி நேரம் எடுக்கும். முழுமையாக சார்ஜ் ஆனதும் உரிமையாளர் போனில் இருக்கும் ஆப்பில் ஒரு அறிவிப்பைப் பெறுவார்.
4) மற்ற அம்சங்கள் (Other Features):
ஓலா ஸ்கூட்டர் 7 அங்குல தொடுதிரை டிஸ்ப்ளேவுடன் வருகிறது. GPS உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் இந்த திரையில் தோன்றும். கூடுதலாக, 4G இணைப்பு, யூடியூப், காலிங் போன்ற அம்சங்களை ஆதரிக்கும். மேலும், ஸ்கூட்டரில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதனை கண்டறிந்து உரிமையாளர் மற்றும் சேவை மையத்திற்கு ஒரு அறிக்கையை அனுப்பும். மேலும் பைண்ட் மை ஸ்கூட்டர் என்ற அம்சத்துடன் வருகிறது.
5) வண்ணங்கள் (Colour Options):
வரவிருக்கும் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 10 வண்ணங்களில் வரும் என ஓலா ஏற்கனவே உறுதி செய்துள்ளது, இதில் 8 வண்ணங்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் மீதியுள்ள இரண்டு வண்ணங்கள் என்னென்ன என்பது குறித்த தகவலை இதுவரை அளிக்கவில்லை.
6) விலை (Price):
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை வரம்பு மாநில வாரியான EV பாலிசி மற்றும் FAME 2 பாலிசி மூலம் விலக்கு இல்லாமல் ரூ .1 லட்சம் முதல் ரூ 1.2 லட்சம் வரை எதிர்பார்க்கப்படுகிறது. பாலிசிகள் இணைந்து ஒருவர் 35,000 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
முன்பதிவிற்கு ரூ. 499 செலுத்தவேண்டும், ஆனால் அது முழுமையாக திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்திய பிறகு ஓலா ஸ்கூட்டர் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.