ஓலா உருவாக்கிய அதிரடி விலை புரட்சி... கொண்டாட்டத்தில் மக்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், ஓலா நிறுவனம் தற்போது விலை போரை உருவாக்கி மக்களை தங்கள் பக்கல் ஈர்த்து வருகிறது.
எலக்ட்ரிக் இரு சக்கர வாகன பிரிவில் ஏதர், ஓகினாவா, பியூர் ஈவி, சிம்பிள் எனர்ஜி, டிவிஎஸ், ஹீரோ எலக்ட்ரிக், பஜாஜ் எனப் பல நிறுவனங்கள் களம் கண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தங்களது வாகனங்களை 70,000 முதல் 1.13 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்து வருகிறது.
இதில் பெரும்பாலான நிறுவனங்களின் எலக்ட்ரிக் வாகனங்களில் தொழில்நுட்ப தரம் என்பது மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால் புதிதாகக் களத்தில் இறங்கியுள்ள ஓலா தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவது மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியில் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே அதிகளவிலான நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
ஓலா தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ வாகனங்களை 99,999 மற்றும் 1,29,999 ரூபாய் விலையில் விற்பனை செய்து வரும் நிலையில் இந்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு FAME கொள்கையின் படி 15,000 ரூபாய் அளவிலான மானியத்தை அளிக்கிறது.
ஒரு பக்கம் தொழில்நுட்பம் சிறந்து விளங்குகிறது, மறுபுறம் வாகனங்களின் விலையும் கிட்டத்தட்ட சக போட்டி நிறுவனங்களுக்கு இணையாக அளித்து வரும் காரணத்தால் சந்தையில் விலை போர் உருவாகியுள்ளது.
இப்போது வரையில் ஏதர், ஓகினாவா, பியூர் ஈவி, சிம்பிள் எனர்ஜி, டிவிஎஸ், ஹீரோ எலக்ட்ரிக், பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையைக் குறைக்கவில்லை. ஆனால் ஓலாவின் விற்பனை துவங்கிய பின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன பிரிவில் மிகப்பெரிய விலை போர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மட்டுமின்றி இந்தியாவில் பேட்டரி மற்றும் ஆட்டோமொபைல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோட்டார் ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம் மேம்படும் பட்சத்தில் விலை அதிகளவில் குறைய வாய்ப்பு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் ஹீரோ எலக்ட்ரிக் வாகனங்கள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான நவீன் முன்ஜால் 2027க்குள் பெட்ரோல் இரு சக்கர வாகன விற்பனையை இந்திய அரசு தடை செய்தால் விரைவில் 100 சதவீதம் எலக்ட்ரிக் இலக்கை விரைவாக அடைய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
ஓலாவின் வருகையும் அதன் அறிமுக வெற்றியும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.