மருமகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட மாமனார்
இந்திய மாநிலம் கேரளாவில் பெண்ணொருவர் அவரது மாமனாரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருமகளுடன் அடிக்கடி தகராறு
கொச்சியின் வடக்கேக்கரா பகுதியைச் சேர்ந்தவர் ஷானு (34). திருமணமான இவர் கணவர் சினோஜுடன் வசித்து வந்தார்.
அவர்களுடன் மாமனார் செபாஸ்டியனும் (67) ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், அடிக்கடி மருமகள் ஷானுவுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செபாஸ்டியனுக்கும், ஷானுவுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அச்சமயம் சினோஜ் வெளியே சென்றிருக்கிறார்.
மருமகளுடன் சண்டையிட்ட செபாஸ்டியன் ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் கத்தியை எடுத்து ஷானுவின் கழுத்தை அறுத்துள்ளார்.
தூக்கில் தொங்கிய மாமனார்
இதில் படுகாயம் அடைந்த ஷானு வீட்டை விட்டு வெளியே ஓடிய நிலையில், சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, செபஸ்டியன் தனது அறையில் தூக்கில் தொங்கி உயிரைவிட்டது தெரிய வந்தது.
அதன் பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஷானு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.