83 வயது பாட்டிக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்; ஒரே நாளில் கோடீஸ்வரியானார்
கனடாவில் லொட்டரியில் கிடைத்த பரிசுத்தொகையால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியிருக்கிறார் 83 வயது பாட்டி ஒருவர்.
கைநழுவப் பார்த்த அதிர்ஷ்டம்
கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Vankleek Hill என்னும் இடத்தைச் சேர்ந்த Vera Page (83), ஓய்வு பெற்றோருக்கான இல்லம் ஒன்றில் தங்கியிருக்கிறார்.
வழக்கமாக அந்த இல்லத்தில் உள்ளவர்களை, வாரந்தோறும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மளிகைக் கடைக்கு அழைத்துச் செல்வார்களாம். அப்படி செல்லும்போது, Vera லொட்டரிச் சீட்டு வாங்குவதுண்டு.
ஆனால், இம்முறை அவர்கள் அந்த இல்லத்திலுள்ளவர்களை மளிகைக் கடைக்கு அழைத்துச் செல்லாததால், தனது மோட்டார் சைக்கிளில் தானே கடைக்குச் சென்றிருக்கிறார் Vera.
அப்போது திடீரென லொட்டரிச் சீட்டு ஞாபகம் வந்ததால் அந்த வாரத்துக்கான லொட்டரிச் சீட்டை வாங்கிவந்துள்ளார் அவர்.
ஒரே நாளில் கோடீஸ்வரியாக்கிய அதிர்ஷ்டம்
பின்னர், அவர் லொட்டரி வாங்கிய அதே பகுதியில் யாருக்கோ லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதைக் கேள்விப்பட்டு, தனது லொட்டரிச் சீட்டை எடுத்துப் பார்த்த Veraவுக்கு தனது கண்களையே நம்பமுடியவில்லை.
ஆம், அவருக்கு லொட்டரியில் 60 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்திருந்தது. உடனே தன் மகனை மொபைலில் அழைக்க, அவர் பதிலளிக்கவேயில்லை. அவரது மருமகளை அழைத்தால், அவரும் பதிலளிக்கவில்லையாம்.
image - globalnews
மறுநாள் காலை மகன் அவரை மொபைலில் அழைக்க, தனக்கு லொட்டரியில் பரிசு விழுந்த விடயத்தைக் கூற விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தாராம் அவர்.
எப்படியும், பாட்டி ஒரே நாளில் கோடீஸ்வரியாகிவிட்டார். கப்பல் பயணம் ஒன்றிற்கு திட்டமிட்டுள்ள Vera, மீதமுள்ள தொகையை தன் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே, தனது சகோதரிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டபோது, தனது சிறுநீரகங்களில் ஒன்றை அவருக்கு தானமாக் கொடுத்தவர் Vera என்பது குறிப்பிடத்தக்கது.