பிரித்தானிய பெண் போட்ட குப்பையில் கிடந்த அந்த பொருள்... பொலிசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் குவிந்ததால் பரபரப்பு
பிரித்தானிய பெண்மணி ஒருவர் குப்பையில் போட வைத்திருந்த பொருட்களில் ஒரு வெடிகுண்டும் இருந்ததது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை, இங்கிலாந்திலுள்ள Swinton நகரில் வாழும் 82 வயது பெண்மணி ஒருவர், தன் வீட்டின் பின்னாலிருந்த ஷெட்டை சுத்தம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அவர் அங்கு கிடைத்த பொருட்களை தெருவில் இருந்த குப்பைத் தொட்டியின் அருகே கொண்டு கொட்டிவைக்க, அவரது உறவினர்கள் அந்த குப்பையில் இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு ஒன்று இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
தகவலறிந்த பொலிசார், காலை 11.30 மணியளவில், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினருடன் அந்த வீட்டுக்கு விரைய, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் அமைந்துள்ள சில வீடுகளிலிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன், மற்றவர்கள் கதவு ஜன்னல்களை மூடிக்கொண்டு வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த வெடிகுண்டை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக வேறொரு இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
விசாரணையில், அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர் அந்த வெடிகுண்டை தன் வீட்டின் பின்னாலிருந்த ஷெட்டில் போட்டு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் மாலை 3.00 மணியளவில் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதுடன், சாலைகளும் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட, நிலைமை சகஜமாகியுள்ளது.