தடுப்பூசி பெற்ற பிறகும் உங்களை கொரோனா தொற்றியதா? இதைச் செய்யவேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள்
கனடாவில், வெறும் சில வாரங்களுக்குள்ளாகவே இலட்சக்கணக்கானோர் Omicron வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிவிட்டது போலிருக்கிறது.
எதிர்பாராத இந்த Omicron வகை கொரோனா வைரஸ் பரவலால், மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, வரலாறு காணாத அளவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது...
இதற்கிடையில், ஏராளமானோர், குறிப்பாக முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றவர்கள் தீவிரம் குறைவான கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
அப்படி முழுமையாக கொரோனா தடுப்பூசி பெற்றும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் நீங்களும் ஒருவரா?
உங்கள் மனதில் ஒரு கேள்வி எழுந்திருக்கலாம்...
பூஸ்டர் தடுப்பூசி பெறவேண்டுமா வேண்டாமா? பெறுவதானால் எப்போது பெற்றுக்கொள்வது?
மக்கள் பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார் ஆல்பர்ட்டா பல்கலை தொற்றுநோயியல் நிபுணரான Dr. Lynora Saxinger.
ஆனால், எப்போது பூஸ்டர் டோஸ் பெறுவது என்று முடிவெடுப்பதுதான் கடினம் என்கிறார் அவர்.
இந்த கேள்விக்கான விடை, மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடுகிறது. கியூபெக் மாகாணம், நீங்கள் அறிகுறிகள் போகும் வரை காத்திருங்கள் என்கிறது. ஒன்ராறியோ மருத்துவர்களோ 30 நாட்கள் பொறுத்திருங்கள் என்கிறார்கள்.
ஆக, எப்போதுதான் பூஸ்டர் டோஸ் பெறுவது?
அதாவது, நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் (immune system) பின்னால் உள்ள அறிவியல் என்ன சொல்கிறதென்றால், முழுமையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் பலனை நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டுமானால், Omicron தொற்றுக்குப் பின் நீங்கள் பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட காத்திருக்கவேண்டும்.
கொரோனா தொற்று இருக்கும்போது தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதீர்கள்
பொதுவாகக் கூறினால், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், எந்த தடுப்பூசியுமே பெற்றுக்கொள்ளக்கூடாது என்கிறார் Saskatchewan பல்கலை தடுப்பூசி மற்றும் தொற்றுநோயியல் ஆய்வாளரும் வைராலஜி துறை நிபுணருமான Alyson Kelvin.
உங்களுக்கு ஒரு நோய் இருந்தால் அதற்கெதிராக உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு போராடிக்கொண்டிருக்கும். அப்போது நீங்கள் ஒரு தடுப்பூசியும் பெற்றால், அதற்கு ஏற்ப உங்கள் உடல் செயல்படாமல் போகலாம்.
ஆகவேதான், ஒருவருக்கு ஒரு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அவருக்கு தடுப்பூசி வழங்காமல், சிறிது காலம் காத்திருக்கவேண்டும் என்கிறார் அவர்.
உங்கள் உடலில் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு எப்போது அமைதியாகிறதோ, அதாவது ஒரு நோயுடன் போரிட்டு முடித்து ஓய்வாகிறதோ, அப்போது பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் அவர்.
சில நோயெதிர்ப்பியல் வல்லுநர்களோ, தொற்று குணமான பிறகு கூட, தடுப்பூசி பெற அவசரப்படவேண்டாம் என்கிறார்கள்.
அதாவது தொற்றின் காரணமாக உருவான நோயெதிர்ப்பு சக்தியே பல மாதங்களுக்கு உடலில் இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.