இது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கலாம்: Omicron தொடர்பில் சுவிஸ் அரசு வெளியிட்டுள்ள கருத்து
Omicron, கொள்ளைநோயின் முடிவுக்கான ஆரம்பமாக இருக்கலாம் என சுவிட்சர்லாந்து அரசு கருத்து தெரிவித்துள்ளது.
திடீரென உருவாகி, உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ் குறித்து, தற்போது தொடர்ச்சியாக ஆறுதலளிக்கும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
முந்தைய வைரஸ்களை விட பல மடங்கு வேகமாக பரவுவதால் முதலில் அச்சத்தை உருவாக்கிய Omicron வைரஸ், தற்போது நோயாளிகளை அதிக அளவில் மருத்துவமனைகளைச் சென்றடைய வைக்கவில்லை என்றும், உயிரிழப்பும் குறைவாகவே உள்ளது என்றும் செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில், Omicron வைரஸ் கொள்ளைநோயின் முடிவுக்கான ஆரம்பமாக இருக்கலாம் என சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.
நீண்ட கால கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ளவும், தனிமைப்படுத்தலை குறைக்கவும் முடிவு செய்த சுவிஸ் அரசு, புதன்கிழமை இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
பெருமளவிலான மக்களுக்கு அதிக அளவில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகியுள்ள நிலையில், கொரோனா ஒரு pandemic என்ற நிலையிலிருந்து, அது ஒரு endemic என்ற நிலைக்கு மாறும் நிலையின் முந்தைய கட்டத்தில் நாம் நிற்பதாக தோன்றுகிறது என்று கூறியுள்ளார் சுவிஸ் சுகாதரத்துறை அமைச்சரான Alain Berset.
நமக்குத் தெரியவில்லை, ஆனாலும் Omicron, கொள்ளைநோயின் முடிவுக்கான ஆரம்பமாக இருக்கலாம் என்றார் அவர்.
சுவிட்சர்லாந்து கொரோனாவின் ஐந்தாவது அலையின் மத்தியில் உள்ளது. ஆனாலும், மருத்துவமனைகள் நிரம்பி வழியவில்லை.
தற்போது கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களில் 90 சதவிகிதம் பேர் Omicron வகை கொரோனா தொற்றினால்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.