மின்னல் வேகத்தில் பரவுகிறது Omicron... பிரான்ஸ் பிரதமர் வெளியிட்டுள்ள செய்தி
ஐரோப்பாவில் Omicron வகை மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவுவதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுக்கு பிரான்ஸ் பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு முன் பேசிய பிரான்ஸ் பிரதமர் Jean Castex, ஐரோப்பாவில் Omicron வகை மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவுவதாகவும், அடுத்த ஆண்டு துவக்கம் வாக்கில், பிரான்சில் அது மற்ற வைரஸ்களை முந்திவிடும் என்றும் கூறியுள்ளார்.
வெள்ளியன்று பிரித்தானியாவிலிருந்து சுற்றுலா மற்றும் தொழில் ரீதியான பயணங்களுக்கு பிரான்ஸ் தடை விதித்தது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் இந்த பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக Mr Castex தெரிவித்தார்.
அவ்வகையில், கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கிடையிலான கால இடவெளியைக் குறைத்தல், உணவகங்கள் மற்றும் நீண்ட தூர பொதுப்போக்குவரத்து ஆகியவற்றை அணுக முழுமையாக தடுப்பூசி பெற்றிருத்தல் அவசியம் ஆகிய கட்டுப்பாடுகளும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட உள்ளன.
மேலும், புத்தாண்டுக்கு முந்தைய அதிகாரப்பூர்வ இரவுக் கொண்டாட்டங்கள் மற்றும் வானவேடிக்கைகள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டில், தடுப்பூசி பெறத் தயங்குவோர் தொடர்பிலும் அரசு நடவடிகைகளை அறிவிக்க இருப்பதாக தெரிவித்த Mr Castex, சில மில்லியன் பிரெஞ்சு மக்கள் தடுப்பூசி பெற மறுப்பதால் ஒரு மொத்த நாடும் அபாயத்துக்குட்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட இயலாத ஒன்று என்றும் கூறியுள்ளதையடுத்து, தடுப்பூசி பெறாதவர்கள் கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.